தூத்துக்குடி
தமிழரின் பெருமையை உலக அரங்குக்கு எடுத்துச் செல்லும் பெருமை பிரதமர் மோடியையே சேரும் என தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், திண்டுக்கல் சீனிவாசன் உள்பட 12 பேர் நாங்குநேரி தொகுதியில் முகாமிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்திய பிரதமர், சீன அதிபரின் வருகையை ஒட்டி சீன பிரதமரை வரவேற்கும் பொருட்டு நாங்குநேரியில் முகாமிட்டிருந்த தமிழக அமைச்சர்கள் இன்று (அக்.11) காலை சென்னை புறப்பட்டனர்.
அதன்பொருட்டு தூத்துக்குடி விமான நிலையம் வந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
தொடர்ந்து அவர் பேட்டி அளிக்கையில், "இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பொது மக்களோடு மக்களாக இருந்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன். அப்பொழுதுதான் மகிழ்ச்சியாக பிரச்சாரம் செய்திட முடியும்.
மாமல்லபுரத்தைக் கட்டமைத்த நரசிம்ம பல்லவனின் பெருமையை, தமிழரின் புகழை இன்று உலக அரங்கில் எடுத்துச் சென்றிருக்கும் பெருமை பாரதப் பிரதமர் மோடியையே சேரும்" என்றார்.
தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்த அவர், "விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்" என்றார்.
கூட்டணி கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அதிமுக மீது அதிருப்தி வெளிப்படுத்தியது குறித்து கேள்வி கேட்டதற்கு, தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. அதுகுறித்து பேச்சு நடைபெறும் என்று கூறிச் சென்றார்.