தமிழகம்

மெட்ரோ ரயில் பணியை மேற்கொள்ளும் நிறுவனம் எது? நீதிமன்ற உத்தரவின்படி நாளை முடிவாகும்

செய்திப்பிரிவு

சென்னையில் மே தின பூங்கா - சைதாப்பேட்டை இடையே நிலுவையில் உள்ள மெட்ரோ ரயில் பணியை எந்த நிறுவனம் மேற்கொள்ளும் என்பது நாளை முடிவாகும்.

சென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணாசாலை வழியாக விமான நிலையத்துக்கும், மற்றொரு வழியில் சென்ட்ரல், கோயம்பேடு, ஆலந்தூர் வழியாக பரங்கிமலைக்கும் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் மே தின பூங்காவில் இருந்து சைதாப்பேட்டை வரையில் மெட்ரோ ரயில் பணிகளை கேமின் நிறுவனம் மேற்கொண்டு வந்தது. ஆனால், இந்த நிறுவனம் திட்டமிட்ட காலத்துக்குள் பணிகளை மேற்கொள்ளாததால் பணியில் இருந்து வெளியேறுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து கேமின் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.

தற்போது முடிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் பணிகள், எஞ்சியுள்ள பணிகள் 2017 ஜூலைக்குள் முடிக்க முடியுமா?, இத்தாலி நிறுவனத்தின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்து கேமின் நிறுவனம் நாளை (ஜூலை 24) நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறது. இந்த அறிக்கையைக் கொண்டு நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை பொருத்தே மெட்ரோ ரயில் பணியை யார் மேற்கொள்வது என்பது முடிவாகும்.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கேமின் நிறுவனம் முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மெட்ரோ பணிகளை யார் மேற்கொள்ள வேண்டுமென்பது முடிவாகும். அதாவது, கேமின் நிறுவனமே மீண்டும் பணியாற்றுமா? அல்லது புதிய நிறுவனம் டெண்டர் மூலம் தேர்வு செய்யப்படுமா என்பது முடிவாகிவிடும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT