கிண்டியில் பைக் மீது லாரி மோதியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (22). தனியார் வங்கியில் கார் ஓட்டுநராக வேலை பார்த்தார். நேற்று காலையில் வேலைக்கு செல்வதற்காக பைக்கில் வீட்டிலிருந்து புறப்பட்டார். நேற்று முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டதால் புதிதாக ஹெல்மெட் வாங்கி, நேற்று முதல் முறையாக அணிந்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றார்.
வேளச்சேரி பிரதான சாலையில் நீச்சல் குளம் அருகே வந்தபோது சமையல் எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி, மோட்டார் சைக்கிளை முந்தி சென்றது. அப்போது லாரியின் பக்கவாட்டுப்பகுதி மோட்டார் சைக்கிளில் உரச, நிலை தடுமாறிய செல்வராஜ் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்தார். லாரியின் பின் சக்கரம் செல்வராஜின் தலை மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே செல்வராஜ் உயிரிழந்தார்.
கிண்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வராஜின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுங்குவார் சத்திரத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் கணேஷ் என்பவரை கைது செய்தனர்.
செல்வராஜ் ஹெல்மெட் அணிந்திருந்தாலும் லாரியின் எடையை தாங்கும் அளவிற்கு எந்த ஹெல்மெட்டும் உறுதியாக இருக்காது. லாரியின் சக்கரம் ஹெல்மெட் மீது ஏறியபோது ஹெல்மெட் அமுங்கி செல்வராஜின் தலை உடைந்து விட்டது. சக்கரம் இறங்கிய பின்னர் ஹெல்மெட் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விட்டது. இதனால் ஹெல்மெட்டின் உட்பகுதிக்குள் செல்வராஜின் தலை உடைந்து கிடந்தது.
விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது: ‘‘ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டும்போது பக்கத்தில் வரும் வாகனங்களை பார்க்க முடிவதில்லை.
சாலைகளை சீர்படுத்த..
பின்னால் வரும் வாகனங்களின் சத்தம் எதுவும் கேட்பதில்லை. தனது அருகே வரும் வாகனத்தை பார்க்க முடியாததால்தான் இந்த விபத்து நடந்துள்ளது. ஹெல்மெட் விதியை மட்டும் தீவிரமாக அமல்படுத்தும் நீதிமன்றம், விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு அடிப்படையாக இருக்க வேண்டிய சாலைகளை சரியாக வைக்க அரசுக்கு உத்தரவு போடவேண்டும்’’ என்றனர்.