தேனி
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மருத்துவக் கல்லூரி மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தைக்கு 15 நாள் நீதிமன்ற காவலை நீட்டித்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் தேடப்பட்டு வந்த உதித் சூர்யா கடந்த 25 ஆம் தேதி கீழ் திருப்பதி அடிவாரத்தில் தன் தந்தையுடன் கைது செய்யப்பட்டார். கைது செய்த பின் சிபிசிஐடி போலீஸாரிடம் தனிப்படை போலீஸார் உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேஷ் இருவரையும் ஒப்படைத்தனர். அதன்பின், தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அவர்களை சிபிசிஐடி போலீஸார் கொண்டு வந்தனர்.
விசாரணை முடிந்து கடந்த செப்டம்பர் 26-ம் தேதி உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேஷ் ஆகிய இருவரையும் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோரை மதுரை மத்திய சிறையில் இருந்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் போலீஸார் இன்று (அக்.10) ஆஜர்படுத்தினர்.
அப்போது, உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேஷூக்கு 15 நாள் நீதிமன்ற காவல் நீட்டித்து, வரும் அக்டோபர் 24 ஆம் தேதி தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.