திமுக ஆட்சியில்தான் சிறுபான் மையினருக்கான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வில்லி வாக்கத்தில் முஸ்லிம்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் உதவிப் பொருள் களை வழங்கி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மிலாது நபி நாளுக்கு அரசு விடு முறை, உருதுமொழி பேசும் முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப் பட்டோர் அந்தஸ்து, சிறுபான்மை யினர் நலன், முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு என சிறுபான்மை முஸ்லிம்களுக்கு திமுக செய்த சாதனைகள் ஏராளம். திமுக ஆட்சியில்தான் சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
2016-ல் திமுக ஆட்சிக்கு வருவது உறுதி என இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற் காக அல்ல, தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்கிறோம். திமுக செய்த சாதனைகளை நினைவில் கொண்டு 2016 தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் பேசினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி, தமிழ் மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
என்னென்ன பொருள்கள்..?
பாசுமதி அரிசி, நெய், எண்ணெய், மைதா, சேமியா, சர்க்கரை, வேட்டி, சேலை உள்ளிட்ட 11 வகையான பொருட்கள் 2,150 பேருக்கு வழங்கப்பட்டன. 550 முஸ்லிம் மாணவிகளுக்கு தலா ரூ.5,000 கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.