பிரதமராக இருந்தபோதும் இல்லாதபோதும் இந்திரா காந்தி எத்தனையோ நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இருந்த போதிலும் 1983 ஜூலை 30-ல் சிக்கிமில் நடந்த குறுகிய நேர விழாவில் அவர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வு. இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததே பலருக்கும் தெரியாது என்பதுதான் இதன் விசேஷம்.
சிக்கிம் தலைநகரான காங்டாக் நகரை திபெத்துடன் இணைக்கும் காங்டாக் நாதுலா சாலைக்கு ஜவஹர்லால் நேரு சாலை என்று புதிய பெயர் சூட்டும் நிகழ்ச்சி அது. அவருடைய முந்தைய ஆட்சிக் காலத்தில் தனி நாடாகத் திகழ்ந்த சிக்கிம், மன்னராட்சியைத் துறந்து இந்தியக் குடியரசின் கீழ் 22-வது மாநிலமாக, 1975 மே 16-ல் இணைந்தது.
ராணுவ நிகழ்ச்சி என்பதாலோ என்னவோ, நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டபடி, மிகச் சரியாக காலை 7.30-க்கு ராணுவ ஜீப் வாகனத்திலிருந்து உற்சாகமாக இந்திரா இறங்கினார். வண்டியிலி ருந்து இறங்கிய வேகத்தில், பெயர்ப் பலகையை மூடியிருந்த திரையை விலக்குவதற்கானப் பொத்தானை அழுத்தினார், புறப்பட்டுச் சென்று கொண்டேயிருந்தார். மொத்தமாக ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. உடனடியாக நாதுலாவை நோக்கி கிளம்பிவிட்டார். தந்தையின் பெயர் சூட்டப்பட்ட சாலையில் முதல் பயணியாக மகள்!
கடல் மட்டத்திலிருந்து 14,410 அடி உயரத்தில் உள்ளது நாதுலா கணவாய். திபெத்திய மொழியில் ‘நாது’ என்பதற்கு ‘கவனிக்கும்/கேட்கும் காது’ என்றும், ‘லா’ என்பதற்கு ‘கணவாய்’ என்றும் பொருள்படுமாம். காங்டாக் நகரிலி ருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தப் பாரம்பரிய வர்த்தகக் கணவாய்.
இந்த ஒரு நிமிட விழா நடைபெற்ற இடம் ‘ஜீரோ பாயிண்ட்’ சந்திப்பு. அன்றைய மாநில ஆளுநர் ஹோமி ஜெ.எச். தலேயார்கான், எல்லைச் சாலை அமைப்பின் உயர் அதிகாரிகள் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றபோதிலும், மாநில முதல்வர் நர் பஹதூர் பண்டாரி பங்கேற்கவில்லை. மாநில ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையில் பனிப்போர் நடைபெற் றுக்கொண்டிருந்த காலம் அது.
நான் பணியாற்றிய மத்திய அரசு அலுவலகம், பிரதமரது பயணம் தொடர்பான தகவல்களை ஊடகங் களுக்கு வழங்கும் பணியில் ஈடு பட்டிருந்ததால், இந்திரா காந்தி யின் துல்லியமான நிகழ்ச்சி விவரங் கள் எனக்கும் தெரிந்திருந்தன. சிக்கிம் வந்து சேர்ந்த இரண்டரை மாதங்களுக்குள்ளாகக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பைத் தவற விடக்கூடாது என்ற எண்ணத்துடன், கேமராவும் கையுமாக நிகழ்ச்சிக்கு முன்னதாகவே வந்து சேர்ந்தேன்.
திறக்கப்பட உள்ள பெயர்ப் பலகைக்கு எதிரே, புகைப்படம் எடுக்க வாய்ப்பான ஒரு இடத்தையும் பிடித்துக் கொண்டேன். எனவே, எனக்கு வெகு அருகில் ஜீப்பில் அமர்ந்தபடி பயணம் செய்த திருமதி இந்திராவை மீண்டும் ஒரு முறை புகைப்படம் எடுக் கும் வாய்ப்பும் கிடைத்தது. சில நாட்கள் கழித்து, இந்திரா காந்தியின் குரலைக் கேட்கும் வாய்ப்பும் என்னைத் தேடி வந்தது. அவரது பயணத்தின்போது, பத்திரி கையாளர் சந்திப்பு ஒன்றுக்கு ராஜ் பவனில் எமது அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது. அதன் ஆங்கில மொழியாக்கத்தைக் கேட்டு, அவரது அலுவலகத்திலிருந்து ஒரு கோரிக்கை வந்தது.
இந்தச் சுவையான பணிக்காக அங்குள்ள அகில இந்திய வானொலி நிலையத்துக்கு அடிக்கடிச் செல்ல வேண்டியதாயிற்று. ‘ஹெட் ஃபோனை காதில் மாட்டிக்கொண்டு, பத்திரிகையாளர் சந்திப்பின் முழு உரையாடலையும் சுருக்கெழுத்தில் குறித்துக் கொண்டேன். பிறகு அதை எங்கள் அலுவலகத்தில் தட்டச்சு செய்து மீண்டும் ஒரு முறை முழு உரையாடலுடன் ஒப்பிட்டுச் சரி செய்து டெல்லிக்கு அனுப்பினோம்.
இது நடந்து சில ஆண்டுகள் கழித்து, 31 அக்டோபர் 1984 அன்று, அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திராவின் எதிர்பாராத கொடூர மரணம் சிக்கிமில் அதிர்ச்சி அலையை எழுப்பியது. அவரை மிக அருகில் பார்த்ததாலும், அவரது கணீர்க் குரலை ‘ஹெட் ஃபோன்’ வழியே திரும்பத் திரும்பக் கேட்டிருந்ததாலும், அவரது மறைவுச் செய்தி எனக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்திரா காந்தியை நான் பார்த் தது ஒரு நிமிடம்தான் என்றாலும், அவரது எளிமையான ஆனால் எடுப்பான உடை, கம்பீர நடை, அழகானப் புன்னகை, கணீர்க் குரல், கேள்விகளைக் கையாண்ட விதம் ஆகியவை என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. ‘வந்தார், கண்டார், வென்றார்’ என்பது இதுதானோ!
கட்டுரையாளர்: பத்திரிகை தகவல் அலுவலகத்தில் சுருக்கெழுத் தாளராகப் பணியாற்றியவர்
தொடர்புக்கு: krishnanbala2004@yahoo.co.in