சென்னை
சுபஸ்ரீ உயிரிழப்பு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவுக்கு வழக்குகளை மாற்ற வேண்டும், ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் சுபஸ்ரீயின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சுபஸ்ரீயின் தந்தை ரவி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, “கடந்த மாதம் பல்லாவரம் துரைப்பாக்கம் நெடுஞ்சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற என் மகள் சுபஸ்ரீ மீது விழுந்தது. அதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் என் மகள் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்துக்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம்.
அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை அகற்ற உயர் நீதிமன்ற உத்தரவை முறையாக அதிகாரிகள் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே தற்போது நடந்து வரும் விசாரணை அனைத்தையும் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு மாற்ற வேண்டும். சுபஸ்ரீயின் மரணத்துக்கு இழப்பீடாக தனது குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கவேண்டும்.
சட்ட விரோத பேனர்கள் வைக்கப்படுவதைத் தடுக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை, கடுமையான தண்டனை வழங்கும் விதமாக சட்டத்திருத்தம் கொண்டுவர அரசுக்கு உத்தரவிடவேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு விடுமுறை கால சிறப்பு அமர்வில் நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
நடந்தது என்ன?
கடந்த 12-ம் தேதி, சென்னை, கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இல்லத் திருமண விழாவுக்காக அதிமுக பிரமுகர்களை வரவேற்க துரைப்பாக்கம் வேளச்சேரி 200 அடி ரேடியல் சாலையின் இருபுறமும் பேனர்கள், சாலைத் தடுப்புகளில் வரிசையாக கட்டப்பட்டிருந்தன. இந்த பேனரில் ஒன்று அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ மீது விழ, அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் லாரியில் சிக்கி உயிரிழந்தார்.
கடுமையான எதிர்ப்பலையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது அலட்சியமாக இருந்து உயிரிழப்பை ஏற்படுத்துதல் என்கிற விபத்துப் பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டு போலீஸார் தேடினர்.
ஜெயகோபால் கைது செய்யப்படாததைக் கண்டித்த உயர் நீதிமன்றம் "எந்தவொரு உத்தரவையும் அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை. மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் கடமையைச் செய்யத் தவறியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு மனித உயிர் பறிபோயிருக்காது. விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மற்றும் விதிமீறலைத் தடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தது.
இந்நிலையில் பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர், மாநகராட்சி அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் தேன்கனிக்கோட்டையில் முக்கியக் குற்றவாளியான ஜெயகோபால் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று சுபஸ்ரீயின் தந்தை ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.