புதுச்சேரி
இலவச செட்டாப் பாக்ஸ் எங்கே? அரசின் கேபிள் டிவி நிறுவனம் எங்கே? என்று முதல்வரிடம் கேள்வி எழுப்புங்கள் என தேர்தல் பிரச்சாரத்தில் சட்டப்பேரவைக்குழு அதிமுக தலைவர் அன்பழகன் எம்எல்ஏ தெரிவித்தார். ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணமில்லை எனவும் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரமாட்டோம் எனவும் அவர் கூறினார்.
புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அதிமுகவினர் இன்று (அக்.9) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அன்பழகன்: கோப்புப்படம்
அப்போது அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவர் அன்பழகன் பேசியதாவது:
"புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு அமைந்தவுடன் அரசு மூலம் கேபிள் இணைப்பும், இலவசமாக செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என்று கூறினர். இவற்றை வழங்காததுடன் செட்டாப் பாக்ஸ் மூலம் கேபிள் ஒளிபரப்புவதை கட்டாயமாக்கினர். ரூ.200-க்கு கொள்முதல் செய்யப்பட்ட செட்டாப் பாக்ஸ் ரூ.2500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அரசு கேபிள் டிவி நடத்தினால் மாதத்திற்கு ரூ.100 தான் கேபிள் கட்டணம் மக்களுக்கு செலவாகும். ஆனால் தற்போது ரூ.250 வாங்கி வருகின்றனர். இந்த மூன்றரை ஆண்டுகாலத்தில் ஒவ்வொரு குடும்பத்திடமும் ரூ.10,500 கட்டணமாகவும், ரூ.2,500 செட்டாப் பாக்ஸுக்காகவும் என மொத்தம் ரூ.13 ஆயிரம் வசூலித்துள்ளனர். அரசு கேபிள் டிவி நடத்தி, செட்டாப் பாக்ஸை வழங்கி இருந்தால் ரூ.4 ஆயிரம் மட்டுமே செலவு ஆகியிருக்கும்.
புதுச்சேரியில் சுமார் 5 லட்சம் கேபிள் இணைப்புகள் உள்ளன. கேபிள் இணைப்பு எண்ணிக்கையை, குறைவாகக் காட்டி அரசுக்கு வர வேண்டிய ரூ.30 கோடியை பல ஆண்டுகளாக ஏமாற்றி வருகின்றனர். இலவச செட்டாப் பாக்ஸ் எங்கே? அரசின் கேபிள் டிவி நிறுவனம் எங்கே? என்று முதல்வரிடம் மக்கள் கேள்வி எழுப்புங்கள்.
ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. ஆட்சிக் கவிழ்ப்பில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரமாட்டோம். முதல்வருக்குதான் ஆட்சி கவிழும் என்ற பயம் உள்ளது. செயல்படாத அரசை நிர்வகிக்கும் முதல்வர் நாராயணசாமி, ஆட்சியை எதிர்க்கட்சிகளிடம் ஒப்படைத்து விடலாம்".
இவ்வாறு அன்பழகன் எம்எல்ஏ பேசினார்.
செ.ஞானபிரகாஷ்