தமிழகம்

ஒருபோக பாசன விவசாயத்திற்காக வைகை அணை திறப்பு: தேனி ஆட்சியர் திறந்து வைத்தார்

என்.கணேஷ்ராஜ்

தேனி

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஒருபோக பாசன விவசாயத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று (அக்.9) தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீரை 7 பிரதான மதகுகள் வழியாக தேனி ஆட்சியர் திறந்து வைத்தார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல் போகத்திற்காக கால்வாய் வழியாக வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

தண்ணீர் திறக்கப்பட்டபோதும் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.

இந்நிலையில் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 61 அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து அணையில் இருந்து, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒருபோக பாசன நிலங்களின் விவசாயத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1130 கன அடி வீதம் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவிபல்தேவ் தண்ணீரை திறந்து வைத்தார். வைகை அணையின் பிரதான மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது.

தற்போது திறக்கப்படும் தண்ணீரின் மூலம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 1,05,002 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். வைகை அணையின் நீர்இருப்பைப் பொருத்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. நீர் இருப்பு குறையும் பட்சத்தில் முறைப்பாசனம் அமல்படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT