விழுப்புரம்
அரசுப் பள்ளிகளில் வரும் 6 மாத காலத்தில் கணினி வசதி ஏற்படுத்தப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட அன்னியூரில் நேற்று (அக்.8) அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் வயல்வெளிகளில் வேலை செய்துவரும் அப்பகுதி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
"இடைத்தேர்தலுக்கு அமைச்சர்கள் உங்கள் பகுதிகளில் முகாமிட்டு பிரச்சாரம் செய்கின்றனர். உங்கள் பகுதி குறைகளையும் நன்கு அறிந்துகொண்டு, மேம்படுத்த இது உதவும். நல்ல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசுக்கு வலு சேர்ப்பதற்கு இடைத்தேர்தலிலும் அதிமுகவை ஆதரிக்க வேண்டும்.
இப்பகுதி மக்களின் கோரிக்கைகளும் தீர்க்கப்பட்டு வருகின்றன. அதன்படி நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும். அதன் மூலம் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு, 12 குளங்கள் முழுமையாகத் தூர்வாரப்பட்டு நீர் சேமிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கஞ்சனூர் உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும், விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். பிளஸ் 2 மாணவர்களுக்கு படிப்புடன் தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு பணி வழங்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் தமிழ், ஆங்கில மொழிகளில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படும். தற்போது 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். விஜயதசமி சிறப்புச் சேர்க்கையின் போது, 50 ஆயிரம் மாணவர்கள் சேர்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
அரசுப் பள்ளிகளில் வரும் 6 மாத காலத்தில் கணினி வசதி, பொலிவுறு வகுப்பறைகள் என அனைத்து வசதிகளும் செய்து முடிக்கப்படும். இதனால், அரசுப் பள்ளிகளை நோக்கி பெரும்பாலான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்".
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.