எம்.வேளாங்குளத்தில் நடவு செய்வதற்காக மரக்கன்றுகளைப் பராமரிக்கும் அய்யனார். 
தமிழகம்

சிவகங்கை அருகே ஆசிரியர் வேலையை துறந்து சொந்த கிராமத்தை பசுமையாக்க பட்டதாரி இளைஞர் முயற்சி

செய்திப்பிரிவு

இ.ஜெகநாதன்

சிவகங்கை

சிவகங்கை அருகே சொந்த கிராமத் தைப் பசுமையாக்க வேலையைத் துறந்து 1 லட்சம் மரக்கன்றுகள் மூலம் வனத்தை உருவாக்கும் முயற்சியில் பட்டதாரி இளைஞர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

சிவகங்கை அருகே எம்.வேளாங்குளத்தைச் சேர்ந்தவர் பா.அய்யனார் (35). எம்எஸ்சி, எம்பில், பிஎட் முடித்துள்ள இவர், தனியார் பள்ளியில் முதுநிலை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவரது கிராமத்தில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக வறட்சி நிலவியது. கண்மாய்கள் வறண்டதால் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளை நிலங்கள் தரிசாகின. ஊருணிகளும் வற்றி குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் வருந்திய அய்யனார் தனது வேலையைத் துறந்து கிராம த்தை வறட்சியில் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

ஆரம்பத்தில் கிராம மக்கள் ஒத்துழைப்பு இன்றி தனி நபராக மரக்கன்று பண்ணை ஏற்படுத்தி வேம்பு, புளி, மா, ஆலம், அரசம், அத்தி, பனை மரங்கன்றுகளை வளர்த்தார்.

மேலும் அவற்றை கண்மாய், ஊருணிக் கரைகளில் நடவு செய்தார். இதைப் பார்த்த இளைஞர் களும், பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தனர். 3 மாதங்களில் 4 ஆயிரம் கன்றுகளை நடவு செய்துள்ளார். மேலும் பக்கத்து கிராமங்களுக்கும் மரக்கன்றுகளை இலவசமாக வழங்குகிறார். தற்போது அவரது கிராமத்தைப் பசுமையாக்க1 லட்சம் மரக்கன்றுகளை வளர்த்து வரு கிறார். மேலும் 4 லட்சம் கன்றுகளை நட இலக்கு நிர்ணயித்துள்ளார்.

இதுகுறித்து அய்யனார் கூறி யதாவது: சமூக வலைதளங்கள் மூலம் பிரச்சாரம் செய்வதைவிட களத்தில் இறங்குவதே சிறந்தது. இதற்காக வேலையையே விட்டு விட்டேன். எங்கள் கிராமத்தில் 4 கண்மாய்கள், 2 ஊருணிகள் உள்ளன. அவற்றில் வளர்ந்த சீமைக்கருவேல மரங்களை ்அகற்றுவதே சவாலாக உள்ளது. ஓராண்டுக்குள் நாங்கள் வனத்தை உருவாக்கி விடுவோம். மேலும் ஒவ் வொரு மரக்கன்றையும் குறைந்தது 4 அடியாவது வளர்க்கிறோம். அதன்பின்பே நடவு செய்கிறோம்.

பக்கத்து கிராமங்களில் மரக் கன்றுகள் கேட்டால், நாங்களே குழி தோண்டி நடவு செய்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT