தமிழகம்

மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 7 பேர் சிகிச்சை: தொடரும் பாதிப்பால் மக்கள் அச்சம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை

மதுரை அரசு மருத்துவமனையில் 7 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். தனியார் மருத்துவமனையிலும் நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆணடுகளாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. 2017ம் ஆண்டு 30-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு இறந்தனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு 10-க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக டெங்கு காய்ச்சலுடன் டிப்தீரியாவும் வேகமாகப் பரவி வருகிறது.

கடந்த சில வாரமாக மதுரை மாவட்டத்தில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு டெங்கு காய்ச்சல் தீவிரமடையத் தொடங்கி உள்ளது. கடந்த வாரம் வரை 20க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப்பெற்றனர்.

அவர்களில் பலர் சிகிச்சைப்பெற்று குணமடைந்து சென்றுள்ளனர். நேற்று மேலும், 2 பேர் டெங்கு காய்ச்சலுக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுடன் சேர்த்து தற்போது 7 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப்பெறுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது.

ஒரு புறம் நோயாளிகள் சிகிசசைக்கு அனுமதிக்கப்படுவதும், மறு புறம் சிகிச்சைப்பெற்று வீடு திரும்புவதுமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறையவில்லை. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு பெரியளவில் உயிரிழப்பு ஏற்படவில்லை. ஆனால், மக்க்கள் அச்சத்துடனே உள்ளனர். அவர்கள் அச்சத்தைப்போக்க சுகாதாரத்துறை, டெங்கு தீவிரமடைந்துள்ள பகுதிகளை அடையாளம் கண்டு நோயை தடுக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

SCROLL FOR NEXT