பழநி
பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல பயன்படும் ரோப் கார் வருடாந்திர பராமரிப்புப் பணி முடிவடைந்து 72 நாட்களுக்கு பிறகு இன்று (அக்.8) காலை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலுக்கு செல்ல படிப்பாதை, இழுவை ரயில், ரோப் கார் ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். இழுவை ரயிலில் ஏழு நிமிடங்களிலும், ரோப் காரில் மூன்று நிமிடங்களிலும் மலைக்கோயிலை அடையலாம். இதனால் ரோப் காரில் அதிகளவில் பக்தர்கள் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
வருடந்தோறும் ரோப் கார் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது. இதன்படி கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
ரோப் காரை இயக்கும் மோட்டார், பற்சக்கரங்கள், பேரிங்குகள், ஷாப்டுகள், புஷ்கள் என அனைத்து பாகங்களும் தேய்மானம் கருதி மாற்றப்பட்டன.
இரும்பு கம்பிவட கேபிள்கள் திறன் சோதிக்கப்பட்டது. இருக்கைகள், கதவுகள் ஆகியவை புதுப்பிக்கும் பணி எனத் தொடர்ந்து நடைபெற்று பணிகள் நேற்று முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து ரோப்காரில் 1120 கிலோ எடைக்கற்கள் வைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில் இன்று காலை முதல் ரோப்கார் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இன்று காலை இதற்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோயில் சிவாச்சார்யார்கள் தீபாராதனைகள் காட்டியதை அடுத்து ரோப்கார் இயக்கம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் இணைஆணையர் ஜெயச்சந்திரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 72 நாட்களுக்கு பிறகு ரோப்கார் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.