தமிழகம்

கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்யும் கும்பல்: 420 மாத்திரைகளுடன் 5 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை

சீன அதிபர் வருவதை ஒட்டி சென்னை முழுவதும் தங்கும் விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்யும் கும்பல் 420 போதை மாத்திரைகளுடன் சிக்கியது.

சீன அதிபர் வருவதையொட்டி, சென்னையில் அனைத்து தங்கும் விடுதிகளிலும் போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனையில் வேப்பேரி திருவேங்கடம் தெருவில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் சோதனையிட்டபோது சந்தேகத்திற்கிடமாகத் தங்கியிருந்த 5 பேரிடம் விசாரணை நடத்தியபோது அவர்களிடம் 420 போதையூட்டும் மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் சிக்கிய மாத்திரைகள் பிரசவ நேரத்தில் கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் வலி நிவாரணி மாத்திரைகள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவற்றைப் போதைக்காக பயன்படுத்துவோரிடம் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் திருவொற்றியூரைச் சேர்ந்த கிஷோர்பாபு (21), எண்ணூரைச் சேர்ந்த டேனியல் (26), செங்குன்றத்தைச் சேர்ந்த வசந்த் (27), தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரைச் சேர்ந்த அரவிந்த் (27), ஷோபன்ராஜ் (26) எனத் தெரியவந்தது.

இதில் எண்ணூர் டேனியல் மீது புதுவண்ணாரப்பேட்டை, ராயப்பேட்டை காவல் நிலையங்களில் தலா ஒரு கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

தண்டையார்பேட்டை ஷோபன்ராஜ் மீது புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் 5 சம்பவங்களில் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும், காசிமேடு காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளும், சாத்தாங்காடு காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளும் உள்ளன.

இவர்கள் 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர். பெரம்பூரில் உள்ள கிஷோர் பாபுவின் நண்பர் அசோக் பாபு போதை மாத்திரைகளை இவர்களுக்குக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

சென்னையில் மதுக்கடைகள் ஒருபுறம் சீரழிவுக்குக் காரணமாக இருக்க, மறுபுறம் கஞ்சா, போதை பவுடர், போதை மாத்திரைகள் இளைஞர்கள், மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றன.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், ''போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் இளைஞர்கள் போதை வஸ்துகளை வாங்குவதற்காக பணத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். இத்தகைய இளைய தலைமுறையினரை செல்வாக்குமிக்க கும்பல் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது.

இதுதவிர பணத்துக்காக செயின் பறிப்பு, வழிப்பறி, கொள்ளை, திருட்டில் ஈடுபடுகின்றனர். சில நேரம் கொலையும் செய்கின்றனர். இதுபோன்ற போதை வஸ்துக்களை வெளி மாநிலங்கள், நாடுகளிலிருந்து சென்னை போன்ற பெருநகரங்களில் விற்பனை செய்ய பெரிய கும்பலே இயங்குகிறது. இவர்களைப்பிடிக்க போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு இருந்தாலும் ஜோராக இவர்கள் தொழிலைச் செய்துவருகிறார்கள்.

இவர்களது வாடிக்கையாளர்களும் நவீனமாகிவிட்டனர். இவர்களுக்குள் வாட்ஸ் அப் குரூப்கள் உள்ளன. அதில் போதைப்பழக்கத்துக்கு ஆளானவர்கள் (வாடிக்கையாளர்கள்) மட்டுமே தொடர்பில் இருப்பார்கள். இந்தக் குற்றச் செயல்களைத் தடுக்க முழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT