தமிழகம்

மீண்டும் வரும் குளிர்சாதனப் பேருந்துகள்: போக்குவரத்துத் துறை செயலாளர் ராதாகிருஷ்ண‌ன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை

சென்னையில், குளிர்சாதனப் பேருந்துகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக போக்குவரத்துத் துறை செயலாளர் ராதாகிருஷ்ண‌ன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோவின் உலக விண்வெளி வாரத்தை ஒட்டி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் பள்ளி மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நேற்று நடத்தப்பட்டன. இதில் கலந்துகொண்ட போக்குவரத்துத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பல்வேறு பரிசுகளை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''போக்குவரத்துத் துறை சார்பில், தீபாவளிப் பண்டிகைக்கு ஏராளமான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பண்டிகைக் காலங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க, வட்டார அலுவலர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுவர். அதேபோல அதிகம் தேவையுள்ள இடங்களில் அரசுப் பேருந்துகளை இயக்கவும் உத்தரவு இடப்பட்டுள்ளது.

சென்னையில் குளிர்சாதனப் பேருந்துகள் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். இதுதொடர்பாக முதல்வர், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோர் ஏற்கெனவே பேசியுள்ளனர். மின்சாரப் பேருந்துகளைத் தனியார் மயமாக்க அரசு சார்பில், எந்தத் திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை'' என்று ராதாகிருஷ்ண‌ன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT