தமிழகம்

பல மாநிலங்களில் வழக்குகள் இருந்தும் காவல் துறையின் குற்ற பதிவேட்டில் இடம்பெறாத முருகன்: சொந்த ஊரில் வழக்கு இல்லாததால் கண்காணிக்கத் தவறிய போலீஸ்

செய்திப்பிரிவு

அ.வேலுச்சாமி

திருச்சி

ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு என பல மாநிலங்களில் கொள்ளை, திருட்டு வழக்குகள் இருந்தபோதிலும் முருகன் மீது இதுவரை குற்றவாளிகளுக்கான 'சரித்திர பதிவேடு' (history sheet) தொடங்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் உள்ளூர் போலீஸார் அவரை கண்காணிக்கவில்லை.

திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த அக்.2-ம் தேதி ரூ.13 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக தனிப்படைகள் அமைத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 3-ம் தேதி மாலை திருவாரூரில் வாகன சோதனையின்போது, திருவாரூர் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண் டன்(34) என்பவரை மடக்கிப் பிடித் தனர். அவருடன் இருசக்கர வாகனத் தில் வந்த திருவாரூர் சீராத்தோப்பைச் சேர்ந்த சுரேஷ்(28) என்பவர் தப்பி யோடினார். அப்போது அவர் விட்டுச் சென்ற பெட்டியில் லலிதா ஜூவல் லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இருந்தன.

அதைத்தொடர்ந்து, பிடிபட்ட மணி கண்டனிடம் விசாரித்தபோது, சீராத் தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல கொள்ளையனும், சுரேஷின் தாய் மாமனுமான முருகன்(45) என்பவர் தலைமையில்தான் இந்த கொள்ளை நடந்தது தெரியவந்தது. முருகன் மீது ஏற்கெனவே கர்நாடகா, ஆந்திரா, புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகள், நகைக்கடைகள், வீடுகளில் கொள்ளையடித்த வழக்குகள் இருப்பதாகவும் தெரியவந்தது.

மேலும், சென்னை அண்ணாநகர் பகுதியில் கடந்த 2018-ல் நடை பெற்ற தொடர் திருட்டு வழக்கு களிலும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. ஆனாலும், தமிழக போலீ ஸாரால் பராமரிக்கப்பட்டு வரும் குற்ற வாளிகளுக்கான ‘சரித்திர பதிவேட் டில்’ (history sheet) முருகனின் விவரங்கள் இதுவரை இடம் பெறவில்லை. இதனால் முருகனின் செயல்பாடுகளை, உள்ளூர் போலீஸார் தொடர்ந்து கண்காணிக்காமல் இருந்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒரு நபர் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு, அடுத்தடுத்து வழக்குகளில் சிக்கும்பட்சத்தில் அவர் மீது காவல் நிலையங்களில் ‘சரித்திர பதிவேடு' உருவாக்கப்படும். இதில் அவரது பெயர், முகவரி, குடும்ப உறுப்பினர் கள், சாதி, வயது, உடல் அடையாளங் கள், புகைப்படங்கள், தொடர்பு எண் கள், பதிவாகியுள்ள வழக்குகள், அவ ரது வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல் வேறு தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

குற்றச் செயல்கள் அடிப்படையில் ஒருவர் மீது எந்த காவல் நிலையத்தில் வேண்டுமானாலும் சரித்திர பதிவேடு தொடங்கலாம். ஆனால் அதன்பின் அதனை, அக்குற்றவாளி குடியிருக்கும் முகவரியை உள்ளடக்கிய காவல் நிலையத்துக்கு மாற்ற வேண்டும். அங்குள்ள போலீஸார் சம்பந்தப்பட்ட குற்றவாளியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அடிதடி, கொலை போன்றவற்றில் ஈடுபடும் ரவுடிகளை மாலை நேரங் களிலும், திருட்டு, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அதிகாலை நேரத்திலும் வீட்டுக்குச் சென்று உள்ளூர் போலீஸார் கண் காணிக்க வேண்டும். ஆனால் முருகனின் பெயர் சரித்திர பதிவேட்டில் இல்லாததால், உள்ளூர் போலீஸார் அலட்சியமாக இருந்துள்ளனர் என்றனர்.

இதுகுறித்து திருவாரூர் போலீஸா ரிடம் கேட்டபோது, ‘‘முருகன் மீது இங்கு எந்த வழக்கும் இல்லை என் பதால், சரித்திர பதிவேடு தொடங்கப் படவில்லை. சில சமயங்களில் வெளி மாநிலங்களில் போலீஸார் இங்கு வந்து முருகனைப் பிடிக்க உதவி கேட் டால் செய்வோம். கைது செய்த பிறகு அவர்கள் எங்களுக்கு முறைப்படி பரிந் துரை செய்யாததால் சரித்திர பதிவேடு தொடங்கவில்லை’’ என்றனர்.

14 பேரிடம் விசாரணை

லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் முருகனின் சகோதரியும், சுரேஷின் தாயாருமான கனக வல்லி(57), சுரேஷின் நண்பரான மணி கண்டன் ஆகியோர் கைது செய்யப் பட்டு சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 4.7 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

முருகன், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டால் மட்டுமே மீதம் உள்ள நகைகளை பறிமுதல் செய்ய முடியும் என்பதால், இவர்களின் உற வினர்கள் மற்றும் நண்பர்களான குணா, ரவி, மாரியப்பன், முரளி உள்ளிட்ட 14 பேரை பிடித்து திருச்சி கே.கே.நக ரில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் வைத்து விசாரணை நடத்துகின்றனர்.

SCROLL FOR NEXT