என்.சன்னாசி
மதுரை
மதுரை நகரில் 22 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பணிபுரிகின்றனர். வழிப்பறி, திருட்டு, கொள்ளை போன்ற குற்றங்களைத் தடுக்க 100 வார்டுகளுக்கு உட்பட்ட 9 ஆயிரம் தெருக்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த இலக்கு நிர்ணயித்து, அதற்கான முயற்சியில் மாநகர காவல் துறை ஈடுபட்டுள்ளது.
குடியிருப்பு நலச் சங்கங்கள் சார்பில் மகால், பந்தடி, வண்டியூர், நகைக் கடை பஜார் உள்ளிட்ட இடங்களில் கேமராக்களைப் பொருத்தி கண்காணிக்கின்றனர். காவல் துறை சார்பில் கே.புதூர், விளக்குத்தூண், கூடல்புதூர், அண்ணா நகர், தல்லாகுளம், மீனாட்சி அம்மன் கோயில் ஆகிய காவல் நிலைய எல்லைகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி அந்தந்தக் காவல் நிலையங்களில் 24 மணி நேரமும் கண்காணிக்கின்றனர்.
மீதம் உள்ள காவல் நிலையங்கள், குடியிருப்பு, தெருக்களிலும் கேமரா பொருத்தும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் நகரில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களை வெகுவாகத் தடுக்க முடியும் எனக் காவல் துறையினர் நம்புகின்றனர்.
காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியதாவது:
குடியிருப்போர் நலச் சங்கம், பொதுமக்களின் பங்களிப்பால் 900-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள், காவல் துறை மூலம் சுமார் 500 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குற்றச்செயல்களைத் தடுக்க, பல்வேறு வகையில் உதவுகின்றன. நகர் முழுவதும் 100 வார்டுகளையும் கேமரா வளையத்துக்குள் கொண்டு வருவதன் மூலம் குற்றச்சம்பவங்களை தடுக்க முடியும். குற்றங்களைத் தடுக்க, காவல் நிலையம் வாரியாக சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் நகரைக் கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
தொழில்நுட்ப நிபுணர் (செரி டெக்கானலஜி) முத்துப்பாண்டி கூறுகையில், சென்னையில் ஆங்காங்கே கட்டுப்பாட்டு மையம் ஏற்படுத்தி சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கின்றனர். மதுரையில் காவல் நிலையத்தில் இருந்தவாறு கண்காணிக்கும் வகையில் கேபிள் மூலம் சிசிடிவிக்கள் ஒருங்கிணைக்கப்படுவதால் குற்றச் செயல் நடக்கும் இடத்தை நேரடியாகக் கண்டறியலாம். குற்றச்செயல் பதிவுகளை சேகரிப்பதோடு, போலீஸாரை துரிதமாக உஷார்படுத்தலாம். அனைத்து காவல் நிலைய எல்லையிலும் கேமராக்களைப் பொருத்தி ஒரே கட்டுப்பாட்டு அறையின் கீழ் ஒருங்கிணைத்தால், பாதுகாப்பு மிகுந்த நகரமாக மாறும் என்றார்.