தமிழகம்

அதிமுக அரசு சுதந்திரமாக செயல்படவில்லை: திருமாவளவன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி

அதிமுக அரசு சுதந்திரமாக செயல் படவில்லை என்று விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து ஏர்வாடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை வகித்தார். இதில், கூட்ட ணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக அரசு சுதந்திரமாக செயல்பட வில்லை. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு கட்டுப்பட்டு, அவர்களின் விருப்பப்படி செயல்படுகிறது. தமிழகத்தில் வேரூன்ற பாஜக பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு தமிழக மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள். நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த இடைத் தேர்தல் அமையும்.

தமிழையும், தமிழ் இனத்தையும், தமிழர் அடையாளங்கள் அனைத்தையும் அழித்தொழிப்பது என்ற அடிப்படையில் மறைமுக செயல்திட்டங்களோடு பாஜக செயல்பட்டு வருகிறது. அதற்கு வக்காலத்து வாங்கும் அரசாக அதிமுக அரசு செயல்படுகிறது.

திரும்பப்பெற வேண்டும்

இயக்குநர் மணிரத்னம் உட்பட 50-க்கும் மேற்பட்ட திரைப்பட கலைஞர்கள் மீது நீதிமன்றத்தின் மூலம் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இது கருத்துரிமையை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் பிரதமர் தலையிட்டு, இந்த வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற உரிய வழிகாட்டுதலை தர வேண்டும். தமிழக அரசும் இதில் உடனடியாக தலையிட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.

தமிழக அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நடைமுறைப் படுத்த முன்வர வேண்டும்.

கீழடியில் நடைபெற்ற முதல் 3 கட்ட ஆய்வு முடிவுகளை அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும். 4-ம் கட்ட ஆய்வு முடிவுகள் மூலம் தமிழர்கள் ஜாதியற்ற சமூகமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று தெரியவருவதாக தொல்லியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இதுவரை திரட்டப்பட்ட தொல்லியல் ஆதாரங்கள் அனைத்தையும் மதுரையில் தொல்லியல்துறை அருங்காட்சியகம் அமைத்து, பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT