ஜெ.ஞானசேகர்
திருச்சி
நாமக்கல் தலைமலை பெருமாள் கோயிலில் ஆபத்து நிறைந்த கிரிவலம் தடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மலை அடிவாரத்தில் கிரிவல பாதை அமைக்கப்பட்டுள்ளது பக்தர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
கிழக்குத் தொடர்ச்சி மலையில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது தலைமலை காப்புக்காடு. மூலிகை உட்பட பல்வேறு வகையான செடிகள், மரங்கள் உள்ள இந்த காப்புக்காட்டில் 3,500 அடி உயரத்தில் உள்ள தலைமலையில் சஞ்சீவிராய பெருமாள் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில் சுயம்புவாக நல்லேந்திர பெருமாள் மற்றும் வெங்கடாஜலபதி, தேவி, பூதேவி ஆகிய தெய்வங்கள் மூலவர்களாகவும், சீனிவாச பெருமாள், ருக்மணி, சத்ய பாமா ஆகிய தெய்வங்கள் உற்சவர்களாகவும், இவர்களுக்கு தென்புறத்தில் அலமேலுமங்கை தாயார் மூலவராகவும், மகாலட்சுமி உற்சவராகவும் அருள்பாலித்து வருகின்றனர். தலைமலை பெருமாள் கோயிலுக்கு சற்றுக் கீழ் கிருஷ்ணர் சன்னதியும், அதற்கு சற்றுக் கீழ் வீர ஆஞ்சநேயர் சன்னதியும், சன்னதிக்கு முன் ராமர் பாதமும் உள்ளன.
இந்தக் கோயிலுக்கு சனிக்கிழமைகளில் பக்தர்கள் வருகை கணிசமாக இருக்கும். குறிப்பாக, புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகள், தை திருவோணம், ஆயுத பூஜை, சித்திரை மாத பிறப்பு, பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தர்கள் மிக அதிக எண்ணிக்கையில் வருவர்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, வடவத்தூர், செவந்திப்பட்டி, திருச்சி மாவட்டம் நீலியாம்பட்டி, சஞ்சீவிபுரம் என அடிவாரத்தின் 5 இடங்களில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்துதான் மலைக்கு ஏற முடியும். கரடுமுரடான- ஆங்காங்கே செங்குத்தான மற்றும் சில இடங்களில் மிகவும் ஆபத்தான பாதையைக் கடந்துதான் இந்த மலைக்குச் செல்ல முடியும்.
அடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்லும் அனைத்து பாதைகளும் தலைமலையில் இருந்து 1 கிலோமீட்டர் கீழே உள்ள கருப்பண்ணசாமி கோயிலில் ஒன்று சேர்கின்றன. தலைமலைக்கு வரும் பக்தர்கள், பெருமாள் கோயிலுக்கு வெளிப்புறத்தில் ஒரு பாதம் மட்டுமே வைக்கும் அளவுள்ள சுவர் விளிம்பில் உயிரைப் பணயம் வைத்து நடந்து சென்று கோயிலைச் சுற்றி கிரிவலம் சென்று வந்தனர். மிக மிக ஆபத்தான இந்த கிரிவலத்துக்கு கோயில் நிர்வாகம் தடை விதித்திருந்ததை பக்தர்கள் பொருட்படுத்தவில்லை. இந்நிலையில், 2017-ம் ஆண்டில் கிரிவலம் சென்ற முசிறியைச் சேர்ந்த சுமை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், கால் இடறி தலைமலையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து, தலைமலையில் கம்பி வேலி தடுப்பு அமைக்கப்பட்டு கிரிவலம் செல்வது முழுமையாக தடுக்கப்பட்டது. இதனால், தலைமலைக்கு வரும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லை என்று வேதனை அடைந்தனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்ட வனத் துறையின் உதவியுடன் பக்தர்கள் கிரிவலம் செல்ல வசதியாக பரம்பரை அறங்காவலர் குழு சார்பில் மலை அடிவாரத்தைச் சுற்றி 27 கிலோமீட்டர் தொலைவுக்கு மண் பாதை அமைக்கப்பட்டுள்ளது பக்தர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
இதுதொடர்பாக பக்தர் ஒருவர் கூறும்போது, ‘‘தலைமலையில் தடுப்புக் கம்பி அமைக்கப்பட்டதால் கிரிவலம் செல்வது முழுமையாக தடுக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், பக்தர்களிடத்தில் கிரிவலம் செல்ல முடியவில்லையே என்ற மனக்குறை, வேதனை இருந்தது. தற்போது மண் பாதை அமைக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.
இதுதொடர்பாக கோயில் பரம்பரை அறங்காவலர்கள் டி.நந்தகோபன், ஆர்.நாராயணசாமி, என்.சுகுமார் ஆகியோர் கூறியது:
தலைமலைக்கு ஏறுவது மிகவும் சிரமம் என்று தெரிந்துதான் பக்தர்கள் வருகின்றனர். சக்தி வாய்ந்த தலைமலை பெருமாள் கோயிலில் பக்தர்கள் வழிபாடு நடத்தினாலே வேண்டுதல்கள் நிறைவேறும். பக்தர்கள் கிரிவலம் செல்ல வசதியாக மலை அடிவாரத்தைச் சுற்றி 27 கி.மீ நீளத்துக்கு மண் பாதை அமைக்கப்பட்டு, கடந்த ஆக.15-ம் தேதி பவுர்ணமி நாளன்று பயன்பாட்டுக்கு வந்தது. தொடர்ந்து, அக்.13-ம் தேதி 3-வது பவுர்ணமி கிரிவலம் நடைபெறவுள்ளது.
பக்தர்கள் மற்றும் குடிபாட்டுக்காரர்கள் அளித்த நன்கொடை மூலம் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்து சமய அறநிலையத் துறை, வனத் துறை ஆகியவற்றின் உதவியுடன் தலைமலையில் ஓராண்டுக்குள் குடிநீர், கழிப்பிட வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றனர்