சென்னை
நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர் விண்கலம் புவி காந்த மண்டலம் பற்றிய ஆய்வுகளையும் மேற் கொள்ளும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: சந்திர யான் விண்கலத்தின் ஒரு பகுதி யான ஆர்பிட்டர் பாகம் தற்போது நிலவை அதன் தரைப்பகுதியில் இருந்து 100 கி.மீட்டர் தொலைவில் சுற்றி வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 13 முதல் 17-ம் தேதி வரை ஆர்பிட்டரில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் கருவி மூலம் முதல்கட்டமாக நிலவின் மேற்பரப்பில் சிலிக்கான், அலுமினியம், சோடியம், கால் சியம் உட்பட தாதுக்களின் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அப்போது சூரியனில் இருந்து வெளிப்படும் எலக்ட்ரான் வகை மின்னூட்ட துகள்கள் நில வின் மேற்பரப்பில் படிந்துள்ளது கண்டறியப்பட்டது.
இந்த வகை துகள்கள் அதிக ஆற்றல் கொண்டவை. நிலவுக்கு முழுமையான வளிமண்டலம் மற் றும் காந்த மண்டலம் இல்லாததால் இவை நேரிடியாக நிலவை வந்தடைகின்றன. மறுபுறம் பூமியை சுற்றியுள்ள புவி காந்த மண்டலம்தான் சூரிய மின்னூட்ட துகள்கள், எரிகற்கள் உட்பட புறச்சூழல் தாக்கங்களில் இருந்து நம்மை பாதுகாத்து வருகிறது.
இதையடுத்து ஆா்பிட்டா் மூலம் புவி காந்த மண்டலம் மற்றும் நிலவின் மேற்பரப்பில் உள்ள மின்னூட்ட துகள்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதுதவிர தற்போது நிலவின் தென்துருவத்தில் பகல் பொழுது தொடங்கி இருப்பதால் லேண்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த இறுதிகட்ட முயற்சிகள் எடுக்கப்படும். ஆர்பிட்டர் மூலம் மீண்டும் லேண்டர் விழுந்த இடங்களை சுற்றி படங்கள் எடுக்கப்படும். அதில் ஏதேனும் சாதகமான தகவல்கள் கிடைத்தால் எதிர்கால திட்டங்களுக்கு உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.