உதகை
உதகை தாவரவியல் பூங்காவில் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை மீட்ட போலீஸார், தாயை தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகை பூங்காவில் நேற்று காலை 8 மணிக்கு தோடர் இன பெண்கள் நடைபயணம் வந்தனர். அப்போது, பூங்காவுக்குள் ஒரு புதரில் குழந்தை அழும் சப்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது, ஆண் குழந்தை இருந்தது தெரியவந்தது. உடனடியாக பூங்கா அதிகாரி மற்றும் 108 ஆம்புலன்ஸ்க்கு பெண்கள் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த உதகை அரசு மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
தகவல் அறிந்த பி1 போலீஸார் வழக்கு பதிவு செய்து, உதகை பூங்கா மற்றும் பூங்கா சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். ஆனால் போலீஸார் வைத்திருந்த பெரும்பாலான கேமராக்கள் வேலை செய்யாததால், பச்சிளம் குழந்தையை வீசிச் சென்றவர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். பெரும் குற்றம் நிகழும் முன்பு அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து பழுதானவற்றை புதுப்பிக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஹரி.ரவிகுமார் கூறும் போது, ‘‘புதரில் கிடைத்த ஆண் குழந்தை பிறந்து 2 மணி நேரம்தான் இருக்கும். 2.5 கிலோ எடை உள்ளது. குளிரால் பாதிக்கப்பட்டுள்ளதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் உடல் நலன் தேறியதும், குழந்தை பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைப்போம்’’ என்றார்.