கிருஷ்ணகிரி
சிலம்பம் போட்டியில் வெற்றிகளைக் குவித்து இந்தியா புக் ஆப் ரெகார்டில் இடம் பிடித்த சூளகிரியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் தரஸ்வினுக்கு ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி விஐபி நகரில் வசித்து வருபவர் செந்தில். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி வித்யாலட்சுமி. இவர்களது மகன் தரஸ்வின்(4). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி பயின்று வருகிறார். தரஸ்வின், சிறு வயதினருக்கான சிலம்பம் போட்டியில் உலக அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். தரஸ்வினின் சாதனைகளை இந்தியா புக் ஆப் ரெகார்டு அங்கீகரித்துள்ளது.
இதுதொடர்பாக அவரது தாயார் வித்யாலட்சுமி கூறும் போது, தரஸ்வின் சிறு வயதி லேயே முச்சு பிரச்சினையால் பாதிக் கப்பட்டிருந்தார்.
விளையாட்டில் ஆர்வத்துடன் காணப்பட்ட தரஸ்வின், வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் மாணவர்கள் சிலம்ப பயிற்சி பெறுவதை பார்த்துக் கொண்டே இருப்பார். இதையடுத்து தானும் சிலம்பம் கற்க வேண்டும் என மிகுந்த ஆர்வத்துடன் கேட்ட தரஸ்வினை, பயிற்சியாளர் பவித்ராமனிடம் அழைத்துச் சென்று, அவருக்கு உள்ள மூச்சு பிரச்சினை குறித்து கூறினோம்.
இருப்பினும் தரஸ்வினின் ஆர்வத்தை கண்ட பயிற்சியாளர், அவருக்கு சிலம்பம் கற்றுத் தந்தார். இதன் பயனாக, தரஸ்வினுக்கு மூச்சு பிரச்சினை முற்றிலும் குணமடைந்துவிட்டது. நன்கு சிலம்பம் பயிற்சி பெற்ற தரஸ்வின், கிருஷ்ணகிரியில் நடந்த மாவட்ட அளவிலான சிறுவருக்கான சிலம்ப போட்டியில் முதலிடம், ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான சிலம்ப போட்டியில் முதலிடம், கோவாவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் மற்றும் சேலத்தில் நடந்த உலக அளவிலான சிலம்ப போட்டியில் முதல் பரிசாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். தரஸ்வின் சாதனைகள் இந்தியா புக் ஆப் ரெகார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை அங்கீகரித்த இந்தியா புக் ஆப் ரெகார்டு நிறுவனம், இளம் வயதில் சிலம்பம் போட்டியில் சாதனை படைத்தவர் என்ற சான்றிதழ் வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது. நமது கலாச்சாரத்தில் இடம் பெற்றுள்ள தற்காப்புக் கலையான சிலம்பம் பயிற்சியில் தரஸ்வின் சாதனை படைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். தரஸ்வின் சாதனையை அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர், சிறுவனை நேரில் அழைத்து பாராட்டினார்.