சென்னை
தமிழகத்தின் ஒரு சில இடங்களில், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், ''வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் சங்ககிரியில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இந்தியாவில் பருவமழை 10 சதவீதம் அதிகமாகப் பெய்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளிலேயே, அதிக பருவ மழை இந்த முறை இந்தியாவில் பதிவாகியுள்ளது. செப்டம்பரில் பெய்த அதிக மழைக்குக் காரணம் திடீரென ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை என்று அண்மையில் ஐ.எம்.டியின் பருவநிலைக் கணிப்புப் பிரிவுத் தலைவர் டி.எஸ். பய் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.