தமிழகம்

குடிசை மாற்று வாரிய தலைவர் கு.தங்கமுத்து காலமானார்: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் தலைவராக இருந்த அதிமுக முன் னாள் எம்எல்ஏ கு.தங்க முத்து உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவ ருக்கு வயது 68.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருநல்லூரைச் சேர்ந்தவர் கு.தங்கமுத்து. திருநல்லூர் ஊராட்சித் தலைவராக இருந்த அவர், அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியபோது, அக்கட்சியில் இணைந்தார். பின்னர், திருவோணம் ஒன்றிய தலைவராக பதவி வகித்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த இடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் தங்கமுத்து வுக்கு குடிசை மாற்று வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

சமீபகாலமாக உடல்நலக்குறை வால் அவதிப்பட்டு வந்த தங்கமுத்து, சில தினங்களாக சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் மரணமடைந்தார். அவரது உடலுக்கு தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அவ ரது உடல் சொந்த ஊரான திருநல்லூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது

முதல்வர் இரங்கல்

தங்கமுத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘அதிமுக விவசாயிகள் பிரிவு செயலரும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய தலைவருமான கு.தங்கமுத்து மரணமடைந்த செய்தி கேட்டு மனவேதனை அடைந்தேன். கட்சியின் மீதும், கட்சித் தலைமை மீதும் மிகுந்த பற்றுகொண்ட தொண்டராக விளங்கியவர் தங்கமுத்து. தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருந்த தங்கமுத்துவின் இழப்பு அதிமுகவுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT