இரா.முத்தரசன்: கோப்புப்படம் 
தமிழகம்

நாட்டின் பிரதமருக்குக் கடிதம் எழுதியது தேசத் துரோக குற்றமா? - இரா.முத்தரசன் கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை

நாட்டின் பிரதமருக்குக் கடிதம் எழுதியது தேசத் துரோக குற்றமா என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (அக்.5) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரும், நாட்டின் உயர் பொறுப்பில் உள்ள பிரதமருக்குக் கடிதம் எழுதி தங்களது கருத்துகளைக் கூறுவதற்கு உரிமை உண்டு. அத்தகைய கடிதங்களுக்கு பிரதமர் தனது அலுவலக வாயிலாக பதில் அனுப்புவது கடமையாகும். ஆனால் இன்று பிரச்சினை தலைகீழாக உள்ளது மட்டுமல்ல, மிக அபாயகரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமருக்கு பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, இயக்குநர் அனுராக் காஷ்யப், இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் நாட்டில் நடைபெற்று வரும் விரும்பத்தகாத படுகொலைகள், தாக்குதல்கள், முஸ்லிம் மற்றும் தலித் மக்களுக்கு எதிரான கூட்டுக் கும்பல் தாக்குதல்கள் குறித்து கடிதம் எழுதினர்.

கடிதத்துக்கான ஆதாரமாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் தகவலில், "கடந்த 2016-ம் ஆண்டில் தலித் மக்களுக்கு எதிராக 840 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் இதுதொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மிகக் குறைவே. 2018 அக்டோபர் முதல் 2019 ஜனவரி 1, வரை மதரீதியாக 254 வெறுப்புக் கொலைகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் 91 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 579 பேர் காயமடைந்துள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஆதாரத்தை சுட்டிக்காட்டி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

"குற்றங்கள் மீது பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், குற்றம்புரிந்தோர் யாராக இருப்பினும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள். இனி இத்தகைய சம்பவங்களை நடைபெறாமல் இருக்க அரசு உத்தரவாதம் அளிக்கின்றது" என்ற பதில் பிரதமரிடமிருந்து வருவதற்கு மாறாக, கடிதம் எழுதியது குற்றம், அவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்தி வழக்குப்பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பிரதமருக்குக் கடிதம் எழுதியதற்காக தேசத்துரோக குற்றம் சுமத்தி வழக்குப்பதிவு செய்திருப்பது என்பது எந்த ஒரு ஆட்சியிலும் நடந்ததாகத் தெரியவில்லை.

நாட்டில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சியா? அல்லது சர்வாதிகார ஆட்சியா? என்ற ஐயப்பாட்டை இவ்வழக்கு ஏற்படுத்தியுள்ளது. தேசத் துரோக வழக்குப் பதிவு செய்திருப்பதற்குக் கண்டனங்கள். இந்த வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்," என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். .

SCROLL FOR NEXT