ரெ.ஜாய்சன்
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை சாகுபடிக்கு பெயர் பெற்ற ஏரல், சாயர்புரம் பகுதிகள் தண்ணீர் பற்றாக்குறையால் முருங்கை சாகுபடிக்கு மாறி வருகின்றன. இங்கு சுமார் 500 ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறைந்த செலவில் போதிய வருமானம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசன பகுதியில் அமைந்துள்ள வைகுண்டம், ஏரல், சாயர்புரம் உள்ளிட்ட இடங்களில் வாழை அதிகளவில் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.
முருங்கை சாகுபடி
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதிகளில் வாழை பயிரிடுவது குறைந்து, முருங்கை சாகுபடி செய்வது அதிகரித்து வருகிறது. இப்பகுதிகளில் மட்டும் சுமார் 500 ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார், சாயர்புரம் அருகேயுள்ள சிறுதொண்டநல்லூரை சேர்ந்த விவசாயி பா.அய்யாத்துரை.
அவர் மேலும் கூறியதாவது:
இந்த பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாகத் தான் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. முன்பெல்லாம் வாய்க்கால்களில் தண்ணீர் எப்போதும் வரும். இதனால் வாழை விவசாயம் நன்றாக நடைபெற்றது. தற்போது வாய்க்கால்களில் தண்ணீர் வருவதில்லை. எனவே, தான் 75 சதவீத விவசாயிகள் முருங்கை சாகுபடிக்கு மாறி விட்டனர்.
குறைந்த தண்ணீர் போதும்
முருங்கையை பொருத்தவரை செடி மற்றும் மரம் என இரண்டு வகைகள் உள்ளன. இரு வகைகளும் இந்த பகுதியில் சாகுபடி செய்யப்படுகின்றன. முருங்கைக்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானது. பெரிய முதலீடு தேவையில்லை.
முதல் ஆண்டில் மட்டும் விதை நடவு, சொட்டுநீர் பாசனம் அமைத்தல், கூலி, மருந்து, உரம் என ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வரை செலவாகும். அடுத்த ஆண்டில் இருந்து பராமரிப்புக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை செலவு செய்தால் போதும்.
ஒரு முறை செடி வைத்தால் 2 ஆண்டுகள் தான் பலன் தரும் என கூறுவார்கள். ஆனால், முறையாக பராமரித்தால் 10 ஆண்டுகள் வரை பலன் பெறலாம்.
15 டன் மகசூல்
ஒரு ஏக்கருக்கு 7 டன் முதல் 15 டன் வரை மகசூல் கிடைக்கும். ஆண்டுக்கு 2 பருவங்களில் முருங்கை காய்க்கும். இதில் ஒரு பருவத்தில் விலை குறைந்தாலும், மற்றொரு பருவத்தில் விலை நன்றாக இருக்கும். இதனால் பெரியளவில் நஷ்டம் ஏற்படாது.
இங்கு விளையும் முருங்கைக் காய்கள் திருநெல்வேலி மற்றும் பாவூர்சத்திரம் சந்தைகளுக்கு தினமும் சராசரியாக 250 முதல் 300 மூட்டை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சீஸன் காலத்தில் தினமும் 500 மூட்டை வரை அனுப்பி வைக்கப்படும்.
தோட்டங்களிலேயே மொத்தமாக வாங்கி சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பி வருகின்றனர். எனவே, ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.20-க்கு விற்பனையானால் கூட ஓரளவுக்கு லாபம் கிடைக்கும் என்றார்.
3,343 ஏக்கர் சாகுபடி
மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சரஸ்வதி கூறும்போது, ``தூத்துக்குடி மாவட்டத்தில் 1,353 ஹெக்டேரில், அதாவது 3,343 ஏக்கர் பரப்பளவில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் வட்டாரத்தில் 807, உடன்குடி வட்டாரத்தில் 405, வைகுண்டம் வட்டாரத்தில் 114, தூத்துக்குடி வட்டாரத்தில் 10, விளாத்திகுளம் வட்டாரத்தில் 10, தென்திருப்பேரை வட்டாரத்தில் 7 ஹெக்டேரில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
முருங்கைக் காய்களை பறிக்காமல் விட்டால் கூட முருங்கை பவுடர் தயாரிக்க பயன்படுத்தலாம்.
முருங்கை பவுடர் தயாரிக்கும் ஆலை தூத்துக்குடி மாவட்டத்தில் இருப்ப தால் விவசாயிகள் ஆர்வமுடன் முருங்கை சாகுபடி செய்கின்றனர்.
முருங்கை பயிருக்கு அரசு சார்பில் மானியம் எதுவும் வழங்கப்படவில்லை. இருப்பினும் முருங்கை சாகுபடி செய்ய விவசாயி களுக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் தோட்டக்கலைத்துறை வழங்கி வருகிறது’’ என்றார்.