தமிழகம்

திருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடையவரை பிடித்ததால் உதவி ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு

செய்திப்பிரிவு

எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளியை, வாகன சோதனையின்போது, பிடித்த திருவாரூர் நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக திருவாரூர் நகரக் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் தி.பாரத நேரு, திருவாரூர் நகரப் பகுதிகளில் குற்றச் சம்பவங்களை உடனடியாக சென்று விசாரிப்பதாலும், தனது துணிச்சலான நடவடிக்கையாலும், சுறுசுறுப்பாக பணியாற்றும் விதத்தின் காரணமாகவும், திருவாரூர் பகுதியில் அனைத்து தரப்பு மக்களிடமும் பிரபலமானவர்.

குறிப்பாக, குற்றச் சம்பவத்தில் ஈடுபடுபவர்களைத் தேடிச்சென்று பிடிப்பதில், பாரத நேரு மிக ஆர்வமாகச் செயல்பட்டு வருபவர். இதன்காரணமாக, குற்றச் சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் அனைவரும், உதவி ஆய்வாளர் பாரத நேருவை தெரிந்து வைத்திருப்பார்கள்.

இந்நிலையில்தான் நேற்று முன்தினம் திருவாரூர் மடப்புரம் பகுதியில், பாரத நேரு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில், அவ்வழியாக மோட்டார் சைக்கிளில், மணிகண்டனுடன் வந்த நகைக்கடை கொள்ளையன் சுரேஷ், பாரத நேருவைப் பார்த்ததும் தப்பி ஓடினார். அதன் பின்னர் சுதாரித்துக் கொண்ட பாரத நேரு, விரட்டிச் சென்று நகைகளை மீட்டதுடன், லலிதா ஜூவல்லரி நகைக்கொள்ளையில் தொடர்புடைய மணிகண்டனையும் கைது செய்தார்.

ரூ.13 கோடி மதிப்பிலான நகைக் கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்கள் குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், திருவாரூரில் வாகன சோதனையின்போது, தனது முந்தைய நடவடிக்கையால் குற்றவாளிக்குப் பயத்தை உருவாக்கி, நகைகளை மீட்டு கொள்ளையர்களில் ஒருவரை பிடித்த உதவி ஆய்வாளர் பாரத நேருவை, பொதுமக்கள் பலரும் சமூக வலை தளங்களின் வாயிலாக பாராட்டி வருகின்றனர்.

பாரத நேரு, தஞ்சாவூர் மாவட்டம் ஒக்கநாடு கீழையூரைச் சேர்ந்த விவசாயி திருஞானம் என்பவரது மூன்றாவது மகனாவார். காரப்பட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இவர், பத்தாம் வகுப்பு படிக்கும்போதே ஈட்டி எறிதல் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அதன் தொடர்ச்சியாக நாமக்கல் மற்றும் புதுச்சேரியில் உடற்கல்வியியல் தொடர்பாக இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை படித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காவல் துறை பணியில் சேர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவரது தந்தை திருஞானம், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியபோது, ‘‘சிறுவயது முதலே, காவல் துறையில் சேரவேண்டும் என்பதை பாரத நேரு குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவரை பிடிக்க முக்கிய பணியாற்றி இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT