தமிழகம்

மருத்துவ முதுநிலை படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு கட்டணத்தைக் குறைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை

மருத்துவ முதுநிலை படிப்பிற்கான (NEET-PG) நுழைவுத் தேர்வு கட்டணத்தை குறைக்கக் கோரிய வழக்கினைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வை நடத்தும் அமைப்பானது ஒரு தனிப்பட்ட அமைப்பு. அதன் கணக்கு வழக்குகள் தணிக்கை செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில்தான் சமர்ப்பிக்கப்படும். இந்த நிலையில் அதன் கட்டணத்தை உயர்த்துவது மற்றும் குறைப்பது குறித்து நீதிமன்றம் எவ்விதமான முடிவையும் எடுக்க இயலாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

திருச்சியைச் சேர்ந்த முகமது காதர் மீரா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்,"நான் இளநிலை மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு தற்போது முதுநிலை மருத்துவ படிப்பிற்கான (NEET-PG) நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ளேன். முதுநிலை படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு தேசிய தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வானது, எய்ம்ஸ், ஜிப்மர் ஆகிய மருத்துவக் கல்லூரிகளுக்கு பொருந்தாது.

இந்நிலையில், எய்ம்ஸ் நுழைவுத்தேர்வுக் கட்டணத்தைவிட நீட் முதுநிலை நுழைவுத் தேர்வுக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்விற்கு பொதுப் பிரிவினருக்கு 3,750 ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 2,750 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இது AIIMS நுழைவுத்தேர்வு கட்டணத்தை விட அதிகம். இந்த முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வானது தனியார் கணினி நிறுவனம் மூலம் நடத்தப்படுகிறது. இந்த தனியார் நிறுவனம்தான் நீட் முதுநிலை மற்றும் எய்ம்ஸுக்கு தனித்தனியாக முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வை நடத்துகிறது.

ஆனால் எய்ம்ஸ் நுழைவு தேர்வு கட்டணத்தை விட நீட் முதுநிலை நுழைவுத் தேர்வுக் கட்டணம் அதிகமாக உள்ளது. இதிலிருந்து, தேசிய தேர்வாணையம் வருடத்திற்கு சுமார் 40 கோடி ரூபாய் லாபம் ஈட்டுகிறது. நீட் முதுநிலை நுழைவுத் தேர்வு கட்டணதைக் குறைப்பது சம்பந்தமாக கடந்த ஜூன் 12 -ம் தேதி குடும்ப நல மற்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலர் மற்றும் தேசிய தேர்வாணையதிற்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே நீட் முதுநிலை நுழைவு தேர்வுக் கட்டணத்தை குறைக்க தேசிய தேர்வாணையத்திற்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு,"நீட் தேர்வை நடத்தும் அமைப்பானது ஒரு தனிப்பட்ட அமைப்பு. அதன் கணக்கு வழக்குகள் தணிக்கை செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் தான் சமர்ப்பிக்கப்படும். இந்த நிலையில் அதன் கட்டணத்தை உயர்த்துவது மற்றும் குறைப்பது குறித்து நீதிமன்றம் எவ்விதமான முடிவையும் எடுக்க இயலாது" எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT