தமிழகம்

ராதாபுரம் தொகுதி; மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கியது

செய்திப்பிரிவு

ராதாபுரம் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டப் பேரவைக்கு நடந்த பொதுத்தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

போட்டியிட்ட இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது கோரிக்கை மனுவில், “வாக்கு எண்ணிக்கையின்போது பதிவான 203 தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணாமல் நிராகரித்துவிட்டனர். 19, 20, 21 சுற்றுகளில் எண்ணப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களையும் மீண்டும் எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” என அப்பாவு தன் மனுவில் கோரியிருந்தார்.

இந்தத் தேர்தல் வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்யும் வகையில் அந்தத் தொகுதியில் பதிவான 19, 20, 21 சுற்றுகளில் எண்ணப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களையும் வரும் 4-ம் தேதி மீண்டும் எண்ண வேண்டுமென்று உத்தரவிட்டு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

தாங்கள் உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதால் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று இன்பதுரை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்பதுரை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க முறையீடு ஒன்று மூத்த நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு செய்யப்பட்டது.

ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை முறையீட்டை விசாரித்த நீதிபதி ரமணா அமர்வு, வழக்கு பட்டியலிடப்படாமல் அவசர வழக்காக விசாரிக்க முடியாது. பட்டியலிடப்பட்டு வந்தால் விசாரணைக்கு எடுக்கிறோம் என நிராகரித்தது.

இந்நிலையில் நேற்று உயர் நீதிமன்றத்தில் இன்பதுரை முறையீடு குறித்த வழக்கில் இன்பதுரை மனுவை நிராகரிப்பதாக கூறி தள்ளுபடி செய்தார். இன்று காலை 11.30 மணிக்கு மறுவாக்கு எண்ணிக்கையைத் தொடங்கி முழுமையாக முடித்தவுடன் அது குறித்த அறிக்கையை நாளை தாக்கல் செய்ய தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள், தபால் வாக்குகள் உயர் நீதிமன்றத்தில் தனியறையில் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டன. நீதிமன்ற உத்தரவுப்படி ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையைக் கண்காணிக்க பதிவாளர் நியமித்த ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கையில் 26 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் அதன் முடிவுகள் சீலிட்ட கவரில் மாலை 4.30 மணி அளவில் உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்.

SCROLL FOR NEXT