விழுப்புரம்
விழுப்புரத்தில் செயல்பட்டு வந்த வருமான வரி அலுவலகத்தை மூடக்கூடாது என வலியுறுத்தி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
விழுப்புரத்தில் செயல்பட்டு வந்த வருமான வரி அலுவலகத்தை மூடி அதை கடலூர் அலுவலகத்தோடு இணைத்து மத்திய அரசு அக்டோபர் 1 ஆம் தேதி ஆணை பிறப்பித்தது. விழுப்புரம் பகுதி மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையின் காரணமாக 1977 ஆம் ஆண்டு இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி, ஆரணி, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த அலுவலகத்தைத்தான் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த அலுவலகத்தை மூடுவதாகவும் கடலூர் அலுவலகத்தோடு இதை இணைப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தப் பகுதி மக்கள் தமது வருமான வரி தொடர்பான நடைமுறைகளுக்காக 200 கிலோ மீட்டர் அளவுக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
விழுப்புரம் பகுதியில் தொடர்ந்து இந்த அலுவலகம் செயல்பட வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்களது கோரிக்கையைக் கருத்தில் கொண்டு விழுப்புரம் அலுவலகத்தைக் கடலூர் உடன் இணைக்கும் முடிவை திரும்பப் பெற்று இந்த அலுவலகம் தொடர்ந்து செயல்பட உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.