தமிழகம்

மது, ஊழல் இல்லாத தமிழகத்துக்கு பாமக-வை ஆட்சியில் அமர்த்த வேண்டும்: வடக்கு மண்டல அரசியல் மாநாட்டில் தீர்மானம்

செய்திப்பிரிவு

அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்த அ.தி.மு.க. அரசை அகற்றி, மது மற்றும் ஊழல் இல்லா மாநில அரசை ஏற்படுத்த பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று வேலூரில் நேற்று நடந்த பாமக வடக்கு மண்டல அரசியல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். அதிமுக.வும், திமுக.வும் மாறி மாறி ஆட்சி செய்த பிறகு தமிழகத்தில் விவசாயிகள் ஏழைகளாக மாற்றப்பட்டுள்ளனர்.நதிநீர் உரிமைகள் தாரை வார்க் கப்பட்டதால் காவிரி காய்ந்து கிடக்கிறது. பாலாறு பாலை வனமாகி விட்டது. விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவிட்டன. உழவர்கள் வறுமையின் பிடியில் சிக்கி தற்கொலை செய்துகொள் ளும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இன்று அரசுப் பள்ளிகள் படிப்படியாக மூடப்படுகின்றன. தனியார் பள்ளிகள் தழைக்கின்றன. தமிழ் வழிக் கல்வி முடக்கப்பட்டு ஆங்கில வழிக் கல்வி அதிகாரம் செய்கிறது. தமிழகத்தில் தொழில் துறையில் முதலீடு செய்ய எவரும் முன்வரவில்லை. மாறாக தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றனர். எந்தத் துறையிலும் சாதிக்காத தமிழக அரசு ஊழலிலும், மது விற்பனையிலும் மட்டும் சாதனை படைத்து வருகிறது.

வேலூர், காஞ்சிபுரம், திருவள் ளூர் போன்ற மாவட்டங்களில் பாலாற்றிலிருந்து மணல் கொள்ளை யடித்து ஆந்திரா, கர்நாடகாவுக்கு கடத்தப்படுவது இன்று வரை தடுக்கப்படவில்லை. வட மாவட்டங் களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. வேலைவாய்ப் புகள் ஏற்படுத்தப்படாததால் மக்கள் குடும்பத்துடன் அண்டை மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்கின்றனர்.

எனவேதான் தமிழகத்தின் வளர்ச்சிக்காக எண்ணற்றத் திட்டங்களை பாமக ஏற்கனவே வெளியிட்டுள்ளது. தமிழகத்தை பீடித்துள்ள மது, ஊழல், பொருளாதார பின்னடைவு, கடன் சுமை உள்ளிட்ட அனைத்து தீமைகளையும் அகற்றி வளர்ச்சிப் பாதையில் வழி நடத்திச் செல்ல பாமகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT