தமிழகம்

தமிழகம் முழுவதும் உள்ள 5.92 கோடி வாக்காளர்களில் 29.50 லட்சம் பேர் மட்டுமே சரிபார்த்துள்ளனர்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

செய்திப்பிரிவு

சென்னை

வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தில், தமிழகத்தில் உள்ள 5 கோடியே 92 லட்சம் வாக்காளர்களில், 29 லட்சத்து 50 ஆயிரத்து 633 பேர் மட்டுமே விவரங்களை சரிபார்த் துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் கடந்த செப்.1-ம் தேதி தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் வாக்காளர்கள் இணைய தளம், செல்போன் செயலி, வாக் காளர் உதவி மையம் ஆகியவற்றின் மூலம் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களை தாங் களே சரிபார்க்கலாம். பெயர், முகவரியில் திருத்தங்கள், புகைப் படம் மாற்றம் ஆகியவற்றை மேற் கொள்ளலாம் என்றும் இதற்கான கடைசிநாள் செப்.30 என்றும் அறிவிக்கப்பட்டது.

அவகாசம் நீட்டிப்பு

கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வரை 23 லட்சத்து 37 ஆயிரம் பேர் மட்டுமே பட்டியலை சரிபார்த்துள்ளனர். இதையடுத்து, இத்திட்டத்தை அக்.15-ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் மக்களின் செயல்பாடுகள் குறித் தும், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தில் தற்போது வரை 29 லட்சத்து 50 ஆயிரத்து 633 பேர் மட்டுமே தங்கள் விவரங்களை சரிபார்த்துள்ளனர். இதில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் திருத்தங்களை மேற்கொண் டுள்ளனர். இது மொத்த வாக் காளர்கள் எண்ணிக்கையான 5 கோடியே 92 லட்சத்தில் 5 சதவீதம் மட்டுமேயாகும். அக்.15-ம் தேதிவரை காலக்கெடு நீட்டிக் கப்பட்ட நிலையில், மீதமுள்ள அனைத்து வாக்காளர்களும் இதில் பங்கெடுத்து தங்கள் விவரங்களை சரிபார்க்க வேண்டும். குறிப்பாக ‘என்விஎஸ்பி’ இணையதளம், செல் போன் செயலி, வாக்காளர் உதவி மையங்களில் தங்கள் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.

இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலைப் பொறுத்தவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 98 ஆயி ரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் நேற்று ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் பறிமுதலானது. பொது மற்றும் தனியார் சுவர்களில் விளம் பரம், கொடி சின்னம் வரைதல் தொடர்பாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விக்கிர வாண்டி தொகுதிக்கு தேர்தல் பணிக்காக 1,917 பேரும், நாங்கு நேரிக்கு 1,460 பேரும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

தற்போது 6 கம்பெனி துணை ராணுவத்தை அனுப்ப தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள் ளது. தேர்தல் பார்வையாளர்கள், காவல்துறையினர் தேவைப்பட் டால் கூடுதல் துணை ராணுவப் படையினரை அனுப்ப கோரிக்கை விடுப்பார்கள். மேலும், வருமான வரித் துறை தனியாக எந்த குழு வையும் கண்காணிப்புக்கு நியமிக்க வில்லை. அந்தந்த மாவட்டத்தில் உள்ள வருமானவரித் துறை அதி காரிகளே பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலுக்கான பொதுப் பார்வையாளர்களாக விக்கிர வாண்டிக்கு வி.சின்னா வீரபத்ருடு வும், நாங்குநேரிக்கு எம்.விஜய சுனீதாவும் நியமிக்கப்பட்டு, அவர் கள் கடந்த 29-ம் தேதியே தொகு திக்கு வந்துவிட்டனர். செலவின பார்வையாளர்களாக நியமிக்கப் பட்டுள்ள சவன் ஸ்வச்சந்த் (விக்கிர வாண்டி), நிதின் சந்த் நேகி (நாங்கு நேரி) ஆகியோர் நியமிக்கப்பட் டுள்ளனர். இவர்கள் இன்று தொகுதிக்கு வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராதாபுரம் வாக்கு எண்ணிக்கை

ராதாபுரம் தொகுதியில் எம்எல்ஏ இன்பதுரை வெற்றிபெற்றதை எதிர்த்து அப்பாவு (திமுக) தொடர்ந்த வழக்கில், கடைசி மூன்று அதாவது 19, 20, 21 ஆகிய சுற்றுக்கள் மற்றும் தபால் வாக்கு களை மீண்டும் எண்ண உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், அந்த 3 சுற்றுக்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தபால் வாக்குகள் அடங்கிய பெட்டி களை ஒப்படைக்கும்படி நீதிமன்றம் கேட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘நீதிமன்றம் கோரி யுள்ள மின்னணு இயந்திரங்கள், தபால் வாக்குகள் நாளை (இன்று) ஒப்படைக்கப்படும். மேலும், வாக்கு எண்ணிக்கையில் அனுபவம் உள்ள அதிகாரிகளை கோரியுள்ளது. அதன்படி 24 அதிகாரிகள் அனுப் பப்பட உள்ளனர்’’ என்றார்.

SCROLL FOR NEXT