சென்னை
தாய் மொழியில் கல்வி கற்றால்தான் படைப்பாற்றல், கற்பனைத் திறன் வளரும் என்று மாணவர்களுக்கு காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் அறிவுரை வழங்கியுள்ளார்.
மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள சாவித்ரி அம்மாள் கீழ்த்திசை மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காந்தி பற்றிய புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியை காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
நாம் அத்தனை பேர் நினைத்தாலும் காந்தியாக வாழ முடியும். கைத்தடி, அரையாடை, ஆட்டுப்பால் தேவையில்லை. சமூகத்தில் அன்பாகவும் உள்ளத்தில் உண்மையாகவும் இருப்பதுதான் காந்தி என்ற நாணயத்தின் 2 பக்கங்களாக திகழ்கின்றன. எனவே, மாணவர்கள் மற்றவர்களிடத்தில் அன்பாக, உண்மையாக இருக்க வேண்டும்.
சத்தியம், அகிம்சை காந்தியத்தின் இரு கண்களாக விளங்குகிறது. தாய் மொழியில் கல்வி கற்பதைத்தான் முக்கியமானதாக காந்தி கருதினார். அதனால்தான் ஆங்கிலத்தில் புலமை பெற்றவராக இருந்தாலும் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை குஜராத்தி மொழியில் எழுதினார்.
தாய் மொழியில் கல்வி கற்றால்தான் படைப்பாற்றல், கற்பனைத் திறன் வளரும். எனவே, தாய்மொழியை ஒதுக்கக் கூடாது. மாணவர்கள் மகிழ்ச்சியாக வாழ அனைவரிடமும் அன்பாக இருக்க வேண்டும். அன்பு இருந்தால் கோபம், பகை உள்ளிட்டவை தோன்றாது. அன்பின் மூலம்தான் சத்தியத்தை தேட வேண்டும்.
இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.
நிகழ்ச்சியில், பள்ளிக் குழு தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான கே.சந்துரு, பள்ளியின் செயலர் டி.சுரேஷ், தலைமை ஆசிரியர் சி.பி.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.