தமிழகம்

சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலூரில் நிரந்தர வெள்ளத் தடுப்புக்கு ரூ.238 கோடி: தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மாநில அரசு நிதியில் இருந்து மேற்கொள்ள ரூ.238 கோடியே 13 லட்சத்துக்கு நிர்வாகம் மற்றும் நிதி ஒப்புதலை தமிழக அரசு அளித்துள்ளது.

சட்டப்பேரவையில் கடந்த பிப்.8-ம் தேதி துணை முதல்வர் 2019-20-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது, பேரிடர் நிர்வாகத்துறையின் கீழ், ‘‘அடிக்கடி வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் எதிர்காலத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான நீண்ட கால திட்டப்பணிகளை மேற்கொள்வது அவசியமாகும். ஒரு சிறப்பு முயற்சியாக, நீர் ஆதாரங்களை பெருக்கவும், வெள்ளத்தடுப்புக்காகவும் ரூ.284 கோடியே 70 லட்சத்தில் பல்வேறு பணிகள் இந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்’’ என்று அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர், இந்த அறிவிப்பின் படி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, ரூ.244 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்க அனுமதி கோரினார். இதை பரிசீலித்த தமிழக அரசு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக ரூ.238 கோடியே 13 லட்சத்து 24 ஆயிரத்து 847 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.

இதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரத்தூரில் புதிய நீர்த்தேக்கம் (ரூ.55.85 கோடி), தாம்பரம்- முடிச்சூர் சாலையில் மூடியுடன் கூடிய கழிவுநீர் கால்வாய் (ரூ.13.74 கோடி), சோமங்கலத்தில் வெள்ள நீர் ஒழுங்கி, சாலை மேம்பாலம் (ரூ.4.68 கோடி) வரதராஜபுரம் அருகில் நீர்த்தேக்கம் (ரூ.11.12 கோடி), ஊரப்பாக்கம் அருகில் வழங்கு கால்வாய் (ரூ.2.15 கோடி), கீழ்க்கட்டளை ஏரியில் இருந்து நாராயணபுரம் ஏரி வரையில் வெள்ள உபரி நீர் கால்வாய் (ரூ.16.75 கோடி), கூவம் ஆற்றின் அருகில் நீர்த்தேக்கம் (ரூ.7 .58 கோடி), திருவள்ளூர் மாவட்டம் ஆரணியாறு குறுக்கில் உள்ள தடுப்பணையை மேம்படுத்துதல் (ரூ.13.70 கோடி), கடலூர் மாவட்டம் பரவணாற்றில் வெள்ள தடுப்பு கால்வாய் (ரூ.54.50 கோடி), கொள்ளிடத்தின் குறுக்கில் புதிய நீரொழுங்கி (ரூ.42.80 கோடி), உப்பனாற்றின் குறுக்கில் கடைமடைநீரொழுங்கி (ரூ.15.25 கோடி) ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

SCROLL FOR NEXT