20 லட்ச ரூபாயை மோசடி செய்து மிரட்டுவதாக அளிக்கப்பட்ட புகாரில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் காவல் ஆணையரை சந்தித்தப்பின் தன்னிலை விளக்கம் அளித்தார்.
டிராபிக் ராமசாமி படத்தின் உரிமைக்காக ரூ.20 லட்சம் பெற்றுக்கொண்டு பின்னர் படத்தை தானே ரிலீஸ் செய்து கொடுத்தப்பணத்தையும் தராமல் கேட்டால் மிரட்டுகிறார் என இயக்குனர் சந்திரசேகர் மீது மணிமாறன் என்பவர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
இதுகுறித்த தனது மறுப்பை புகாராக காவல் ஆணையரிடம் இன்று மாலை எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“எப்போதும் சத்தியம் ஜெயிக்கும், அதில் ஆழ்ந்த நம்பிக்கை எனக்குண்டு, என்னைப்பற்றி புகார் அளித்த மணிமாறனுக்கும், டிராபிக் ராமசாமி பட விவகாரத்திற்கும் துளிகூட சம்பந்தமில்லை. அவர் என் அலுவலகத்துக்கே வந்ததே கிடையாது. அவர் எந்த விவகாரம் குறித்தும் பேசியது இல்லை. சம்பந்தமில்லாத ஒருத்தர் சம்பந்தமில்லாத தகவலை கூறியுள்ளார்.
அடுத்தது தவறான தகவல் ஒன்று கூறியுள்ளார். நானே அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு நானே படத்தை ரீலீஸ் செய்ததாக சொன்ன தகவல் முற்றிலும் உண்மையில்லை. கனடாவில் உள்ள ஆனந்த் சுப்ரமணியம் என்கிற நபர் எனக்கு போன் செய்து ‘டிராபிக் ராமசாமி’ படத்தை நானே வாங்கிக்கொள்கிறேன் என பேசி ரூ. 50 லட்சம் அட்வான்ஸ் தருவதாக உறுதியளித்தார். அதில் 20 லட்சத்து 62 ஆயிரம் அனுப்பினார்.
மீதிப்பணத்தை அவரால் அனுப்ப முடியவில்லை, பத்து நாள் கழித்து என்னால் பணம் அனுப்ப முடியவில்லை என கடிதம் மெயிலில் வருகிறது. பின்னர் அக்ரிமெண்ட் கேன்சல் ஆகி அதுவும் மெயிலில் வருகிறது. இதுதான் உண்மை. அவர் திரும்பத்திரும்ப சொல்கிறார் அட்வான்ஸ் வாங்கிவிட்டு நானே படத்தை வெளியிடுவேன் என்கிறார்.
நான் என்ன பைத்தியக்காரனா? இதுபோன்ற வியாபாரத்தை விட்டுவிட்டு நானே சொந்தமாக வெளியிடுவேனா?” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் அளித்த பதில்:
மணிமாறன் கனடா நபரின் தொழில் பார்ட்னர் அதனால்தான் புகார் அளிக்கிறேன் என்கிறாரே?
அது எனக்கு தெரியாது, அக்ரிமெண்ட்டை பாருங்கள் நானும், அந்த கனடா நபர் ஆனந்த் சுப்ரமணியனும்தான் கையெழுத்து போட்டுள்ளோம்.
பணத்தை கேட்டபோது திருப்பித்தரவில்லை என்கிறாரே?
அவர் பட உரிமையை வாங்கிவிட்டு கடைசி நேரத்தில் முடியாதென திருப்பி கொடுக்கிறார். அப்போதுகூட நான் அடுத்தவர்களுக்கு படத்தை விற்றாவது அவர் பணத்தை செட்டில் செய்யணும் அதுதான் அக்ரிமெண்டில் உள்ளது. ஆனால் அவர் கொடுத்தது கடைசி நேரத்தில், முடியாது எனும்போது தமிழ்ப்பட உலகில் ரீலீஸுக்கு அருகில் படத்தை விற்க முடியாது அது எல்லோருக்கும் தெரியும்.
கடந்த ஆண்டு ஜூன் 22 கவுன்சில் படம் ரிலீஸ் தேதி எனக்கு கொடுத்தார்கள், அதனால் வேறு வழியில்லாமல் நானே சொந்தமாக ரிலீஸ் செய்தேன். இதனால் எவ்வளவு நஷ்டம் எனக்கு ஏற்பட்டது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.
அதனால் பணத்தை திருப்பி தர இயலாது என்று அவருக்கு சொல்லிவிட்டேன். போய்விட்டது அது. இது கடந்த ஆண்டு நடந்தது. ஒன்றேகால் ஆண்டு கடந்தப்பின் இவர் ஏன் இப்போது புதிதாக வருகிறார் எனக்கு தெரியவில்லை.
திடீரென கம்ப்ளைண்ட் கொடுக்க என்ன காரணம்?
என்ன காரணம் எனக்கு தெரியவில்லை, இவ்வளவு நாட்கள் நான் வாங்கி வைத்துள்ள நல்ல பெயரை கெடுக்க யாரோ முயற்சிக்கிறார்கள் என்பது எனக்கு தெரிகிறது. கடவுள் என்னை உயர்த்திக்கொண்டே போகிறார், என் குடும்பத்தை உயர்த்திக்கொண்டே போகிறார்.
இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.