தமிழகம்

அமைதி ஊர்வலம், அஞ்சலி நிகழ்ச்சிகள்: பிரியாவிடை கொடுத்த மக்கள்.. சென்னை சோகம்

செய்திப்பிரிவு

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு குக்கிராமங்கள் முதல் மாநக ரங்கள் வரை பொதுக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அமைதி ஊர்வலங்கள், அஞ்சலி நிகழ்ச்சிகளால் தமிழகமே சோகத்தில் மூழ்கியது

கடந்த 27-ம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் காலமான அப்துல் கலாமின் உடல் அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பல்வேறு மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

அப்துல் கலாமுக்கு தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ராமேசுவரத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வுகள் அனைத்தும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. வீடுகளில் அமர்ந்து இதைப் பார்த்த பெண்கள், குழந் தைகள் முதல் அனைவரும் கண்ணீருடன் அந்த அக்னி நாயகனுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

ராமேசுவரத்தில் கலாமின் இறுதி ஊர்வலம் நடைபெற்ற அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் அமைதி ஊர்வலங்களும் அஞ்சலி கூட்டங்களும் மலரஞ்சலி நிகழ்ச்சிகளும் நடந்தன. அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மாணவர், இளைஞர், பெண்கள் அமைப்புகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், வணிகர் சங்கங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், ரசிகர் மன்றங்கள், ஊழியர் சங்கங்கள் என பல்வேறு அமைப்புகளின் சார்பில் தமிழகமெங்கும் அமைதி ஊர்வலங்களும், பிரார்த்தனை கூட்டங்களும் நடந்தன. பள்ளிகள், கல்லூரிகள்,காய்கறி சந்தை கள், பேருந்து, ரயில் நிலை யங்கள், ஆட்டோ நிறுத்து மிடங்கள், வணிக வளாகங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அப்துல் கலாமின் உருவப் படங்களை வைத்து அஞ்சலி செலுத்தப் பட்டது. எங்கு பார்த்தாலும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் களும், டிஜிட்டல் பேனர்களுமாக காட்சி அளித்தன.

கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் வீதிகள், வர்த்தக பகுதிகள் வெறிச்சோடின. வீடுகள் களையிழந்து காணப்பட்டன. தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. எல்லா இடங்களிலும் அப்துல் கலாம் பற்றிய பேச்சுக்களே எதிரொலித்தன. அவரது சாதனைகள், மனிதநேயம், எளிமை குறித்து சிலாகித்து பேசினர். தமிழகமே சோகத்தில் மூழ்கியிருந்தது.

சென்னையில்..

கோடம்பாக்கம் புலியூர் பிரதான சாலை, டிரஸ்ட்புரம், அண்ணா நெடும்பாதை, சூளைமேடு நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாமின் உருவப் படத்துக்கு பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தியாகராய நகரில் பெரும் பாலான கடைகளுக்கு முன்னாள் அப்துல் கலாமின் உருவப் படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டி ருந்தன. அவற் றுக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும் மலர் தூவியும் மக்கள் மரியாதை செலுத் தினர். நடேசன் பூங்கா, பனகல் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த கலாம் படத்துக்கு நடை பயிற்சிக்கு வந்தவர்கள் கண்ணீருடன் மலரதூவி அஞ்சலி செலுத்தினர்.

தலைமைச் செயலக பத்திரிகையாளர் அறையில் அலங் கரிக்கப்பட்ட அப்துல் கலாம் படத்துக்கு மெழுவர்த்தி ஏற்றி பத்திரிகையாளர்கள் அஞ்சலி செலுத்தினர். தாம்பரத்தில் காய்கறி வியாரிகள் சங்கம், அண்ணா சிறு கடை வியாபாரிகள் சங்கம், சாலையோர சிறுகடைகள் சங்கங்களின் கூட்டமைப்பு, வியாபாரிகள் சங்கம் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் அப்துல் கலாம் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

மெரினா கடற்கரையில் சென்னை லயன்ஸ் கிளப் சென்டெனியல் சார்பாக கலாம் படத்துக்கு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அமைந்தகரையில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாய வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் ஆலந்தூரில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவது என முடிவு செய்யப்பட்டது.

வடசென்னை சர்மா நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் அப்துல் கலாமின் உருவம் பதித்த பதாகையுடன் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

தமிழ்நாடு முடி திருத்துவோர் சங்கத்தினர் கலாம் படங்களை ஏந்தியவாறு கொடுங்கையூர் ஜிஎன்டி சாலையில் அமைதி ஊர்வலம் நடத்தினர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் பூந்தமல்லி நெடுஞ் சாலையில் புறக்காவல் நிலையம் உள்ளது. இங்குள்ள கொடி மரத்தில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, அதற்கு அடியில் அப்துல் கலாமின் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது.

ரயில், பேருந்து பயணிகள் அதில் சில விநாடிகள் நின்று கலாமிற்கு அஞ்சலி செலுத்தினர். சென்னை எழும்பூரில் உள்ள கவின்கலைக் கல்லூரி மாணவர்கள் களிமண்ணால் செய்யப்பட்ட அப்துல் கலாம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பள்ளிவாசல்களில் சிறப்பு பிரார்த்தனை

சென்னையில் சில பள்ளிவாசல்களில் நேற்று மதியம் தொழுகைக்குப் பிறகு குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த அப்துல் கலாமிற்காக சிறப்பு கூட்டுப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. இதில் முஸ்லிம்கள் திரளாகக் கலந்துக் கொண்டனர்.

மேலும், இன்று வெள்ளிக்கிழமை மதியம் ஜும்மா சிறப்புத் தொழுகைக்குப் பிறகு பல்வேறு பள்ளி வாசல்களில் அப்துல் கலாமுக்காக சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெறவும் ஏற்பாடு செய்துள்ளதாக முஸ்லிம் ஜமாத் பிரமுகர்கள் தெரிவித்தனர்.

800 ஆட்டோஸ்டான்டுகளில் கலாமுக்கு அஞ்சலி

சென்னையில் திருவான்மியூர், கோயம்பேடு, வில்லிவாக்கம் உட்பட தமிழகம் முழுவதும் 800 ஆட்டோ ஸ்டாண்டுகளில் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு ஏஐடியுசி, சிஐடியு, தொமுச, விடுதலைச் சிறுத்தைகள், குட்வில் ஆகிய 5 தொழிற்சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட ஆட்டோ ஸ்டாண்டுகளில் அப்துல் கலாம் படத்தை வைத்து மலர் தூவியும், மெழுகுவத்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். ஷேர்ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் வாசுகி நகரில் இருந்து வியாசர்பாடி வரையில் பேரணி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சேஷசயனம் கூறுகையில், ‘‘மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 5 தொழிற்சங்கங்கள் சார்பில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 800 ஆட்டோ ஸ்டாண்டுகளில் அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT