செய்தியாளர் சந்திப்பின் போது ஸ்டாலின் 
தமிழகம்

நீட் ஆள்மாறாட்ட முறைகேடு: வெளிமாநிலத் தரகர்களுக்கு தொடர்பு; சிபிஐ விசாரணை தேவை- ஸ்டாலின்

செய்திப்பிரிவு

திருவாரூர்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடுகளில் வெளிமாநிலத் தரகர்களின் தொடர்பு இருப்பதால் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.3) திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "கருணாநிதியின் பெயரால், அவருடைய வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து அருங்காட்சியம் ஒன்று காட்டூரில் அமைக்கப்படுவதற்காக, நானும் என்னுடைய தங்கை செல்வியும் இணைந்து நிலம் வாங்கியிருக்கிறோம். விரைவில், அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணி தொடங்கப்படும். கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில், அதன் திறப்பு விழா நடத்தத் திட்டமிட்டுள்ளோம்''என ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையடுத்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்தார்.

நீட் தேர்வு ஆள் மாறாட்டத்தில், ஒரு நபர் என்று ஆரம்பித்தது, தற்போது 30-க்கும் மேற்பட்ட நபர்கள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வந்திருக்கின்றனவே?

ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஆள்மாறாட்டம் செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. எனவே, நீட் தேர்வை அடியோடு ஒழிக்க வேண்டும். நீட் தேர்வு இருக்கவே கூடாது என்ற கொள்கையில் இருக்கக்கூடியது திமுக என்பது எல்லோருக்கும் தெரியும்.

அது ஒருபுறம் இருந்தாலும், இந்த நீட் தேர்வில் சான்றிதழ் பெறுவது, தேர்வு எழுதுவது போன்றவற்றில் பல முறைகேடுகள் தரகர்கள் மூலமாக, அதிலும் தமிழ்நாட்டில் இருக்கும் தரகர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களில் இருக்கும் தரகர்கள் ஒன்று சேர்ந்து சில அதிகாரிகள் துணையோடு இந்த ஆட்சியாளரக்ளின் துணையோடு செய்திருப்பது போல் தொடர்ந்து செய்திகள் எல்லா பத்திரிகைகளிலும் வந்துகொண்டிருக்கின்றன.

தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏதோ கண்துடைப்புக்காக சிபிசிஐடி விசாரணை என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். சிபிசிஐடி என்பது அரசுக்குக் கட்டுப்பட்டு இருக்கும் துறை. அதனால், நியாயம் கிடைக்க வாய்ப்பு கிடையாது.

ஆகவே, சிபிஐ விசாரணை நடத்திட வேண்டும். தமிழகத்தில் இருக்கும் தரகர்கள் மட்டுமல்ல, மற்ற மாநிலத்தில் இருக்கக்கூடிய தரகர்களும் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். எனவே, நியாயம் கிடைக்க வேண்டுமென்றால் சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளியே வரும்.

திருவாரூர் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர்கள் பற்றாக்குறை அதேபோல், மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவர்கள் பற்றாக்குறை என்று பல்வேறு புகார்களை மாணவர்கள் தெரிவிக்கிறார்களே?

இது, திருவாரூரில் மட்டுமல்ல, பல மாவட்டங்களில் இருக்கும் மாருத்துவமனைகளிலும் இதுபோன்ற குறைபாடு இருக்கின்றது. அதனால்தான் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது.

திருவாரூர் அரசு கல்லூரி மருத்துவமனையைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், மகப்பேறு மருத்துவமனையில் 19 காலியிடங்கள் மற்ற எல்லாத்துறைகளிலும் 25 சதவீத மருத்துவர்கள் மட்டுமே இருந்து கொண்டிருக்கிறார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால், இங்கு இருக்கும் மருத்துவக் கருவிகளை புதுக்கோட்டைக்கு மாற்றுவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. எனவே, அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

காலியாக உள்ள ஊழியர்கள், மருத்துவர்கள் போன்ற பணியிடங்களை முறையாக அரசு நிரப்பிட வேண்டும்".

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT