மதுரை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் 4ஜி சேவையை துவக்கி வைத்த மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் உடன் தலைமை பொது மேலாளர் வி.ராஜூ மற்றும் முதன்மை பொது மேலாளர் ராஜம் உள்ளிட்டோர். படம் – எஸ்.கிருஷ்ணமூர்த்தி. 
தமிழகம்

மதுரையில் பிஎஸ்என்எல் அதிவேக 4ஜி சேவை தொடக்கம்: விரைவில் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த திட்டம்

த.இளங்கோவன்

மதுரை

மதுரை மாநகரப் பகுதிகளில் பிஎஸ்என்எல்-ன் 4ஜி தொலைத்தொடர்பு சேவை இன்று (அக்.3) தொடங்கப்பட்டது. விரைவில் புறநகர் மற்றும் கிராமப்புறப் பகுதிகளுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படும் என நிர்வாகம் சார்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 4ஜி சேவையை துவக்கிய பிஎஸ்என்எல் நிறுவனம் இச்சேவையை ஒவ்வொரு நகரமாக விரிவுபடுத்தி வருகிறது.
பிஎஸ்என்எல்-ன் தமிழ்நாடு தொலைதொடர்பு வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கோவை, சேலம், நாகர்கோவில், திருச்சி ஆகிய 4 நகரங்களில் ஏற்கெனவே 4ஜி சேவை துவங்கப்பட்டுள்ள நிலையில் ஐந்தாவது மாநகராக இன்றுமுதல் மதுரையிலும் இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்துகொண்டு இச்சேவையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட தலைமை பொதுமேலாளர் வி.ராஜூ கூறுகையில், "மதுரை மாநகரில் உள்ள 137 செல்போன் டவர்களில் முதற்கட்டமாக அதிவேக 4ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இச்சேவையை புறநகர் பகுதிகளுக்கும், கிராமப்புறங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.

தமிழ்நாடு தொலைதொடர்பு வட்டத்தில் ஏற்கெனவே 4ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள நான்கு மாநகரங்களின் மூலம் இரண்டு லட்சம் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர். அடுத்தடுத்த நகரங்களில் இச்சேவையை விரிவுபடுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும்.

இதுவரை 4ஜி சிம்கார்டு பெறாத மாநகரப் பகுதியில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள வாடிக்கையாளர்கள் சேவை மையங்களை அணுகி இலவசமாகவும், வெளியூர் வாடிக்கையாளர்கள் 100 ரூபாய் கட்டணம் செலுத்தியும் புதிய 4ஜி சிம்கார்டுகளைக் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

வாடிக்கையாளர்கள் உறுதுணை அவசியம்..
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 4ஜி சேவையை துவக்கிவைத்த மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில், "இந்தியாவில் ஆன்ட்ராய்டு மொபைல் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாவது இடம் வகிக்கிறது.
இந்நிலையில் பிஸ்என்எல்லின் 4ஜி சேவை மதுரைக்கு தாமதமாக வந்துள்ளது. பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லின் வளர்ச்சியில் வாடிக்கையாளர்களுக்கும் முக்கிய பொறுப்பு உள்ளது என்பதை உணர்ந்து அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT