பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

புதுக்கோட்டையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் சிகிச்சை

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அடுத்தடுத்து மழை பெய்ததைத் தொடர்ந்து காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தினமும் சிகிச்சைக்காக வருவோரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் புறநோயாளிகள் பிரிவில் வரும் 500 பேரில் 300-க்கும் அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோரே வருகின்றனர். இவர்களில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் பரிசோதனைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்ட வண்ணாரப்பட்டி ராமமூர்த்தி (34), மாலையீடு பரிமளா (30), கூழையன்விடுதி புவனேஸ்வரி (27), பொன்னகர் ஜெஸ்லி (60) ஆகிய 4 பேர், அங்குள்ள டெங்கு சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ.மீனாட்சி சுந்தரம் கூறியபோது, "டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரைக் குணப்படுத்த மருத்துவமனையில் போதுமான வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 4 பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் நாளுக்கு நாள் உடல் நலம் தேறி வருவதால் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவர். தொடர் காய்ச்சலுக்காக வருவோரை உடனடியாகப் பரிசோதனை செய்யவும், உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தால் உள்நோயாளிகளாக அனுமதிக்கவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது," எனத் தெரிவித்தார்.

சுரேஷ்

SCROLL FOR NEXT