சென்னை
மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் சிறந்த மாநிலத்துக்கான விருதை தமிழகம் பெற்றுள்ளது.
மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சார்பில், ஊரகப் பகுதிகளில் சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் ஆகியவற்றின் முக்கிய அளவீடுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிடைக்கப்பெற்ற மதிப்புகளின் அடிப்படையில் இந்திய அளவில் சிறந்த மாநிலத்துக்கான விருது தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத் தில் நேற்று நடைபெற்ற தூய்மை பாரத விழாவில், சிறந்த மாநிலத்துக்கான விருதை பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து தமிழக அரசின் சார்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக் கொண்டார். இந்த ஆய்வுகள், 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 17-ம் தேதி முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் இந்தியாவில் உள்ள 690 மாவட்டங்களில் உள்ள 17 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் 31 ஊரக மாவட்டங்களில் உள்ள 800-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் இந்த தூய்மை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் கிடைக்கப் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.