சென்னை
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு என்றும் அந்த வீடு அலிபாபா குகை எனவும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை, பாரிமுனையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''மக்களுக்காக கமல் கட்சியைத் தொடங்கவில்லை. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கமல்ஹாசனின் கட்சி என்பது, மக்களுக்கானது அல்ல. தேர்தல் நேரத்தில் மட்டும் வருவேன். மற்ற நேரங்களில் பிக் பாஸ் ரூமுக்குள் செல்வேன். அதன்பிறகு வெளியே வரமாட்டேன் என்று சொன்னால் என்ன செய்வது?
பிக் பாஸ் என்பது கலாச்சாரத்தின் சீரழிவு. உள்ளே என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அலிபாபா குகை போல உள்ளது. அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு வெளியே வருகிறார்கள். வழக்கு தொடுப்பேன் என்கிறார்கள். பிக் பாஸ் உள்ளே பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.
கமல் இவற்றில்தான் கவனம் செலுத்துகிறாரே ஒழிய, நாட்டு மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது இல்லை. கமல் சொல்வது குறித்து யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
நீட் தேர்வை எடுத்துக்கொள்ளுங்கள். வாட்ஸ் அப்பில் வந்தது, 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' படத்தின் மூலம் நீட் ஆள்மாறாட்டத்துக்கு வித்திட்டவர் கமல். இதுபோன்ற கருத்துகளை எல்லாம் எம்ஜிஆர் என்றாவது சொல்லி இருக்கிறாரா?'' என்று கேள்வி எழுப்பினார் அமைச்சர் ஜெயக்குமார்.
முன்னதாக நேற்று, சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற கான் 2019 நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அதில் மாணவர்களிடம் பேசிய அவர், ''கரை வேட்டிகளால்தான் தமிழக அரசியலில் கறை படிந்துள்ளது'' என்பது உள்ளிட்ட ஏராளமான விமர்சனங்களை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.