தமிழகம்

காலை 10 முதல் மாலை 4 மணி வரை என அனைத்து பொதுத் துறை வங்கிகளிலும் வாடிக்கையாளர் சேவை நேரம் நீட்டிப்பு

செய்திப்பிரிவு

சென்னை

தமிழகம் முழுவதும் அனைத்து பொதுத் துறை வங்கிகளிலும் வாடிக்கையாளர் சேவை நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை என்று நீட்டிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் முன்பு வாடிக் கையாளர் சேவை நேரம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இருந்தது. பின்னர், இது பிற்பகல் 3.30 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இதை மாலை 4 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று இந்திய வங்கிகள் கூட்டமைப்பு முடிவு செய்து அறிவித்தது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்ட மைப்பு கூட்டம், அதன் தலைவரும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநருமான கர்ணம் சேகர் தலைமையில் கடந்த மாதம் நடந்தது. இந்திய வங்கிகள் கூட்ட மைப்பு பரிந்துரை செய்தபடி வங்கி வாடிக்கையாளர் சேவை நேரத்தை மாற்றலாம் என்று இக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தனியார் வங்கிகளும் இந்த சேவை நேரத்தை அமல்படுத்துமாறு இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அனைத்து பொதுத் துறை வங்கிகளிலும் இந்த புதிய நேர மாற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை என்று சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வங்கி சேவை நேரம் கிடைக்கும். குறிப்பாக, வெளியூருக்கு அவசரத் தேவைக்காக பணம் அனுப்புவது, பணம் எடுப்பது, நகைக் கடன் பெறுவது, கேட்புக் காசோலை பெறுவது உள்ளிட்ட வங்கி சேவை களை பெற முடியும்.

இணையதள வங்கி சேவையை பயன்படுத்தாமல் முழுக்க வங்கிக் கிளைகளையே நம்பியிருக்கும் கிராமப்புற மக்களுக்கு, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று வங்கி அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT