தமிழகம்

பிரதமர் மோடி-சீன அதிபரை வரவேற்று  14 இடங்களில் பேனர்:   மத்திய- மாநில அரசுகள் உயர் நீதிமன்றத்தில் மனு

செய்திப்பிரிவு

பிரதமர் மோடி - சீன அதிபர் மாமல்லபுரத்தில் சந்திப்பதை அடுத்து அவர்களை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய - மாநில அரசுகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா - சீனா இடையிலான உறவு, வர்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபத் ஜீ ஜின்பிங்கும், தமிழகத்தில் மாமல்லபுரதத்தில் சந்தித்து பேசுகின்றனர்.

இந்த சந்திப்பு வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடக்கிறது. சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்திருந்தது. இருந்தும், அதையும் மீறி வைக்கப்பட்ட பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியானதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது.

இந்தச் சூழ்நிலையில், தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்டோரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசின் செய்தி மற்றும் தகவல் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சார்பில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர் பாஸ்கரன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழகம் வரவுள்ள பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்கும் வகையில் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் அக்டோபர் 9ம் தேதி முதல் அக்டோபர் 13-ம் தேதி வரையிலான ஐந்து நாட்களுக்கு அரசின் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டுமென அந்த மனுவில் கோரப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் முறையிட்டார்.

இந்த முறையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை அக்டோபர் 3-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், ஏற்கனவே பேனல் வழக்கில் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட எதிர் மனுதாரராக உள்ளவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கும்படியும் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT