கொடைக்கானல்
காபி விவசாயிகளை பாதுகாத்திட எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் கட்டுபடியான விலை கிடைத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தாண்டிக்குடியில் நடந்த காபி விவசாயிகள் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காபி விவசாயிகள் சிறப்பு மாநில மாநாடு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியான தாண்டிக்குடியில் இன்று(அக்.1) நடைபெற்றது.
மாநாட்டிற்கு அகில இந்திய விவசாயிகள் சங்க கமிட்டி உறுப்பினர் என்.சேதுராமலிங்கம் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர்கள் கே.முகமதுஅலி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய விவசாயிகள் சங்க நிதிச்செயலாளர் பி.கிருஷ்ணபிரசாத் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.
காபி விவசாயிகள் விளைவிக்கும் அராபிகா, ரொபஸ்டா ரக காபி வகைகளுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இடுபொருட்கள் விலை உயர்வு, கூலி உயர்வு காரணமாக காபி உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ளது. இதனால் கட்டுபடியான விலைகிடைக்காமல் காபி விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.
இதை தவிர்த்து காபி விவசாயிகளை பாதுகாத்திட எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் கட்டுபடியான விலை கிடைத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், காபி விவசாயிகளுக்கு கூட்டுறவு அமைப்புக்களை உருவாக்கி அதன்மூலம் காபி விற்பனை செய்ய காபி போர்டு ஏற்பாடு செய்யவேண்டும். காபியை மதிப்பு கூட்டுதல் மூலம் காபி விவசாயிகள் கூடுதல் லாபம் பெறமுடியும். இதற்கு மத்திய மாநில அரசுகள் மற்றும் காபி போர்டு மூலம் நிதி உதவி அளிக்கவேண்டும் என்றும் அரசை கேட்டுக்கொள்ளப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் வனவிலங்குகள் தாக்குதலால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் 10 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் காபி உள்ளிட்ட பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்தி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இதை தவிர்க்க வனவிலங்குகளுக்கு தேவையான உணவுகளை வனப்பகுதியிலேயே கிடைப்பதை வனத்துறையினர் உறுதிசெய்யவேண்டும்.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் யூகலிப்டஸ், கிராண்டிஸ் மரங்கள் உள்ளன. இவை தண்ணீரை அதிகம் உறிஞ்சுகின்றன. இவற்றை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். வன உரிமைச்சட்டத்தை அமலாக்கவேண்டும்.
காலம் காலமாக மலைகளில் வசித்துவரும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு தடைவிதிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் மத்திய குழு உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க திண்டுக்கல் மாவட்டத்தலைவர் பி.செல்வராஜ், மாவட்ட செயலாளர் என்.பெருமாள் மற்றும் காபி விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.