சென்னிமலை
சென்னிமலை அருகே 30-க்கும் மேற்பட்டோருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், மருத்துவர்கள் முகாமிட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்துக்குட்பட்டது வரப்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட மேற்கு சாணார்பாளையம் பகுதியில் கடந்த 4 நாட்களாக 50-க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர். இதனையடுத்து இங்கு பி.காசிபாளையம் மற்றும் சென்னிமலை அரசு மருத்துவமனை சார்பாக முகாம் அமைக்கப்பட்டது. நடமாடும் மருத்துவமனை மூலம் அங்கு உள்ள பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 30-க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்ததை அடுத்து ஆறு பேர் பெருந்துறை ஐஆர்டி மருத்துவமனை மற்றும் பி.காசிபாளையம் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து நான்கு மருத்துவர்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், நடமாடும் மருத்துவமனை மூலம் தொடர்ந்து பரிசோதனை செய்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு வந்த பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கவும் ஆலோசனை கூறிச் சென்றார். திடீரென ஒரே கிராமத்தில் முப்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் பரவியதால் அப்பகுதியில் அச்சம் ஏற்பட்டது.
கோவிந்தராஜ்