பாம்பு விழுந்தான் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் உறைகிணறு. 
தமிழகம்

பரமக்குடி அருகே பழங்கால சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு

கி.தனபாலன்

பரமக்குடி

பரமக்குடி அருகே பழங்கால சுடுமண் உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பாம்பு விழுந்தான் கிராமத்தில் ராக்கப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பகுதியில் ஊர்த்தலைவர் பூமிநாதன் மற்றும் இக்கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் சிவகுமார், இளைஞர்கள் துணையுடன் பரமக்குடியைச் சேர்ந்த ஆசிரியர் சரவணன் ஆய்வுப் பணியில் நேற்று (திங்கள்கிழமை) ஈடுபட்டார்.

அப்போது அங்கு குழி ஒன்று தோண்டுகையில் பழங்கால சுடுமண் உறைகிணறு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் இப்பகுதியில் வேலைப்பாடுகள் மிக்க மண்பாண்டங்கள், மண் ஓடுகள், பழங்கால மக்களின் எலும்புகள் ஆகியன ஏற்கனவே கிடைத்துள்ளன.

இதுகுறித்து ஆசிரியர் சரவணன் கூறும்போது, "இங்கு கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணறு கீழடி அகழ்வாராய்ச்சியில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள சுடுமண் உறைகிணற்றின் வடிவத்தை ஒத்துள்ளது.

அதாவது மூல வைகை வருசநாடு மலைத் தொடரில் இருந்து வைகை ஆறு கடலில் கலக்கும் ஆற்றங்கரை மற்றும் கச்சத்தீவு வரையில் வைகை நாகரிகம் பரவி உள்ளது.

உடைந்த மண்பாண்ட ஓடுகள்

அதனடிப்படையில் வைகை ஆற்றங்கரையில் பரவியுள்ள வைகை நாகரிக தொல்லியல் மேடுகளில் பரமக்குடி பாம்பு விழுந்தான் என்ற இடமும் ஒன்றாகும்.

ஆகவே பாம்புவிழுந்தான் கிராமத்தில் தமிழக அரசும், தொல்லியல் துறையும் முறையாக அகழாய்வு செய்து தமிழர்களின் வரலாறு, பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றை சான்றுகளுடன் வெளிப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கடந்த மாதம் பரமக்குடி வட்டம் கலையூர் கிராமத்தில் தொல்லியல் மேட்டில் இருந்து சமீபத்தில் முதுமக்கள் தாழி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

SCROLL FOR NEXT