தமிழகம்

லஞ்ச ஒழிப்பு ஆணையர் பதவி; தலைமைச் செயலருக்கு கூடுதல் பொறுப்பு: ஸ்டாலின் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக தலைமைச் செயலர் சண்முகத்துக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமைச் செயலாளராக சண்முகம் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையராகப் பதவி வகித்த மோகன் பியாரே நேற்றுடன் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையராக அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பை அவர் கூடுதலாகக் கவனிப்பார் என ஆளுநர் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலராக ராம மோகன்ராவ் இருந்தபோது லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் பதவி அவரிடம் கூடுதலாக அளிக்கப்பட்டது. பின்னர் கிரிஜா வைத்தியநாதன் வந்தபோது அவரும் கூடுதலாக லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக பொறுப்பைக் கவனித்து வந்தார். பின்னர் அவரிடமிருந்து உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டியிடம் கூடுதல் பொறுப்பாகக் கொடுக்கப்பட்டது.

அப்போது குட்கா விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு வந்தது. அதில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கே.கே. சசிதரன் ‘தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தனிநபரை நியமிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையராக ஜெயக்கொடியை அரசு நியமித்தது. அவருக்குப் பின் மோகன் பியாரே லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையரானார். இந்நிலையில் மீண்டும் தலைமைச் செயலர் வசம் கூடுதல் பொறுப்பாக மாற்றப்பட்டுள்ளது.

மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் பொறுப்பாக தலைமைச் செயலர் வசம் ஒப்படைக்கப்படுவதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தன் ட்விட்டர் பதிவில், ''விஜிலென்ஸ் ஆணையம் & லஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல் பொறுப்பு சண்முகம் ஐஏஎஸ் -க்கு வழங்கப்பட்டிருப்பது உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. இது ஆணையத்தின் சுதந்திரத்தைப் பறிக்கும்.

இந்த உத்தரவை உடனே ரத்து செய்து, அப்பதவிக்கென தனியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT