கோடை மழை காரணமாக மின் தேவை குறைந்ததால், வடசென்னை மற்றும் தூத்துக்குடி மின் நிலையங்களில் தலா ஒரு அலகில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. மழை நின்று வெயில் அடிப்பதால் இன்று முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகை, விழுப்புரம், திருச்சி மாவட்டங்களில், ஒரு சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மழை பெய்ததுடன், குளிர்ந்த வானிலை நிலவியது.
இதனால் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின் விசிறி மற்றும் குளிர்சாதன வசதிக்கான மின்சாரத் தேவை பெருமளவு குறைந்தது. இதையடுத்து, இரு தினங்களாக வடசென்னையின் மூன்றாவது அலகில் 210 மெகாவாட், தூத்துக்குடி நான்காம் அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
கடந்த சனிக்கிழமை காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில், தமிழகத்தின் மொத்த மின்சாரத் தேவை 12 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து 10 ஆயிரத்து 700 மெகாவாட்டாக குறைந்தது. மத்திய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து 3,176 மெகாவாட் மின்சாரமும், தமிழக அனல் மின் நிலையங்களில் 3,182 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தியானது.
எண்ணூரில் 2 அலகுகளில் 170 மெகாவாட், நெய்வேலி முதல் நிலையில் ஒரு அலகில் 50 மெகாவாட் மின் உற்பத்தி, தொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மழை ஓய்ந்து சனிக்கிழமை முதல் மீண்டும் வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் வடசென்னை, தூத்துக்குடி நிலையங்களில் நிறுத்தப்பட்ட அலகுகளில் இன்று முதல் மீண்டும் உற்பத்தி தொடங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.