சென்னை
ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதைக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக ஆயிரத்து 250 மரங்கள் நடப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.
சென்னை ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்காக திரு.வி.க. பூங்காவை மெட்ரோ ரயில் நிர்வாகம் கையகப்படுத்தியபோது, பணிகள் முடிந்த பின் பூங்கா மீண்டும் அதே நிலையில் அமைக்கப்படும் என அளித்த உறுதியை மீறியதாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன், ஸ்ரீதேவி மேனன் உள்பட 48 பேர் வழக்கு தொடர்ந்தனர்.
அதில் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு நடத்தாமலும், சுற்றுச்சூழல் தடையில்லா அனுமதி பெறாமலும் கட்டுமானப் பணிகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் 50 ஆயிரம் சதுர மீட்டருக்கும் குறைவான பரப்பளவிலான இடத்திலேயே கட்டுமானப் பணி நடைபெறுவதால் சுற்றுச்சூழல் ஒப்புதல் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஏற்கெனவே உள்ள விதிமுறைகளின்படி வெட்டபட்ட மரங்களுக்கு ஈடாக ஆயிரத்து 250 மரங்கள் நடப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
அரசின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், ஒருபுறம் வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் மரங்கள் வெட்டப்படும்போது மறுபுறம் சுற்றுச்சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவது என்பது வளர்ச்சித் திட்டங்களை நிறுத்துவதற்காக வகுக்கப்பட்டதல்ல என்பதையும், இயற்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகத்தான் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.