சென்னை
புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணிநேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வாய்ப்பு உண்டு. மாவட்டங்களின் ஒரு சில இடங்களில், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், நாகை, சிவகங்கை, மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
அடுத்த 24 மணிநேரத்துக்கு லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும். இதனால் அப்பகுதியில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
கடந்த 24 மணிநேரத்தைப் பொறுத்தவரை விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் 15 செ.மீ. மழையும் ஸ்ரீவில்லிபுத்தூரில் 13 செ.மீ. மழையும் நீலகிரி, குந்தா அணைக்கட்டுப் பகுதியில் 11 செ.மீ. மழையும் பெய்துள்ளது''.
இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.